தருமபுரி மாவட்டம், அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரை கோட்டை வாளையம்பள்ளம் பகுதியை சேர்ந்த அம்பிதுரை (45) இவரது மனைவி அனிதா (35), இவர்களுக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு அப்பகுதியில் உள்ள வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் கால்நடைகளுக்கு தேவையான தீவன பயிர்களை பயிரிட்டுள்ளனர். அந்த தீவன பயிர்களுக்கு நீர் பாய்ச்ச இன்று காலை அனிதா தோட்டத்திற்கு சென்று நீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு செல்லும் போது இவரின் நிலத்தின் அருகே இவரது கணவரின் பெரியப்பா மகனான ரமேஷ் என்பவர் நிலம் உள்ளது.

அந்த நிலத்தில் ரமேஷ் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளார். இதனை வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் இருக்க வயலை ஒட்டி இரும்பி கம்பி கட்டி அதில் மின்சாரம் பாய்ச்சியதாக கூறப்படுகிறது. இதனை அறியாத அனிதா தெரியாமல் அந்த கம்பியை மிதிக்க உடலில் மின்சாரம் பாய்ந்து அனிதாவை தூக்கி வீசப்பட்டது.

மின்சாரம் பாய்ந்த அனிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோபிநாதம்பட்டி காவல்துறையினர் அனிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.