விழுப்புரம் சரக டி.ஐ.ஜி திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்.பி தீபக் சிவாஜ் ஆகியோர், நாளை (10 ஆம் தேதி) பொறுப்பேற்க உள்ளனர்.
தமிழகத்தில், வரும் லோக்சபா தேர்தலையொட்டி, ஐ.பி.எஸ் நிலையிலான காவல்துறை உயர் அதிகாரிகள் 47 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

முதல் கட்டமாக தேர்தல் விதிமுறையின்படி காவல், வருவாய் போன்ற துறைகளின் உயர் அதிகாரிகள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்தாலோ, சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தாலோ, அவர்களை வேறு இடத்துக்கு மாற்ற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது. விதிகளின்படி பலர் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் சார்பு கொண்டவர்களின் தலையீட்டைத் தடுக்கும் வகையில் காவல்துறை உள்ளிட்ட பிற துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
குற்ற வழக்கு நிலுவையிலுள்ள எந்த அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை காவல் தலைமையக தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த திஷா மிட்டல், விழுப்புரம் டி.ஐ.ஜி.யாக இடம் மாற்றப்பட்டுள்ளார். இதேபோல், விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த சசாங்சாய், சென்னை சி.ஐ.டி. கியூ பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி காவல் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த தீபக் சிவாஜ், விழுப்புரம் எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், உடனுக்குடன் பணியிடங்களில் சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல், விழுப்புரம் காவல் சரக அலுவலகத்திலும், எஸ்.பி தீபக்சிவாஜ் எஸ்.பி அலுவலகத்திலும் வரும் 10 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
எஸ்.பி தீபக் சிவாஜ், 2018-ம் பேட்ஜ் அதிகாரியாவார். முதலில், ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கமாண்டன்டாக சேர்ந்த இவர், 2022 ஆம் ஆண்டில் செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து, விழுப்புரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஐ.ஜி திஷா மிட்டல், 2010-ம் பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். சென்னையில் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்து, தற்போது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்க உள்ளார்.