கள்ளக்குறிச்சி மாவட்டம், குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய், தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் வயது (29). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா வயது (29). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவர்களது மகள் தமிழ் யாழினி வயது (3) மற்றும் மகன் சாஜித் வயது (1). தேவேந்திரனுக்கும் சரண்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

அதேபோல் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சரண்யா, தனது தாய் வீடான தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அன்றைய தினம் மாலை தனது பாட்டி சின்னபொண்ணுவிடம், குழந்தைகளுக்கு பால் வாங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு, தனது 2 குழந்தைகளுடன் சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்த நிலையில், வீட்டிற்கு அருகே உள்ள ஏரிக்கரையின் ஓரமாக உள்ள கிணற்றுக்கு அருகே சரண்யாவின் துணி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி சரண்யா மற்றும் குழந்தைகளை தேடினர். இந்த நிலையில், சரண்யாவிடம் இருந்து அவரது சகோதரி ஷாலினிக்கு அதிகாலை 4 மணியளவில் தொலைபேசி வந்துள்ளது. அப்போது தான் ரீட்டா நகரில் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் உடனடியாக ஷாலினி மற்றும் போலீசார் சரண்யா இருக்கும் இடத்திற்கு சென்று, குழந்தைகள் எங்கே என்று கேட்டதற்கு அவர்கள் கிணற்றில் இருப்பதாக தெரிவித்து கதறி அழுதார்.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணியளவில் கிணற்றுக்குள் இருந்து தமிழ் யாழினி மற்றும் சாஜித் ஆகிய 2 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் போலீசார் விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக குழந்தைகளுடன் சரண்யா கிணற்றில் குதித்துள்ளார். அதில் சரண்யாவிற்கு நீச்சல் தெரிந்ததால் அவரால் கிணற்றில் மூழ்க முடியவில்லை. அதனால் கிணற்றில் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த ஏரியில் மூழ்கியுள்ளார்.
அங்கும் முடியாததால், பின்னர் ரீட்டா நகர் அருகில் உள்ள மின்சார கம்பம் மீது ஏறி கீழே விழுந்ததில் மயக்கமடைந்துள்ளார். அப்போது அதிகாலை 4 மணியளவில் தங்கள் நிலத்துக்கு அந்த வழியாக சென்ற பொதுமக்கள், சரண்யாவை எழுப்பி யார் என்று கேட்டதற்கு நடந்ததை கூறி கதறியுள்ளார். அதை தொடர்ந்து அருகில் இருந்த ஒருவரிடம் போனை வாங்கி, தனது தங்கைக்கு போன் செய்து கூறியது தெரியவந்தது. இதனை அடுத்து சரண்யாவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.