அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். இதற்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளிப்பதற்கு முன்பே தனி நீதிபதி வழக்கு விசாரணை தொடங்கி உள்ளதாக பரபரப்பான தகவல் இடம்பெற்றுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடம் மீட்புத்துறை அமைச்சராக இருப்பவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். இவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார். 2006-2011ல் தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்தபோது கருணாநிதி அமைச்சரவையில் அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்தார்.இந்த காலக்கட்டத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தனது வருமானத்தை மீறி ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 2011ல் அதிமுக ஆட்சிக்காலத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த சொத்து குவிப்பு வழக்கில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனைவியுடன் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுதலையானார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து அந்த வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்க தொடங்கினார். முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வழக்குகளை இவர் தாமாக முன்வந்து விசாரித்து வரும் நிலையில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கையும் கையில் எடுத்தார். தற்போதைய அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோரின் வழக்குகளை போல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்க தொடங்கினர்.

பொன்முடி

இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கு மறுஆய்வை எதிர்த்து அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதில் கீழ்கோர்ட்டில் முடிந்த வழக்கை யாரும் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி இருந்தார். அவர் வாதம் வைக்கும்போது “முடித்து வைக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல்லாமல் இதுபோன்ற உத்தரவை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பிறப்பித்துள்ளார். ஆகவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர்

இதையடுத்து கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் வரும் பிப்ரவரி 5ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம் ஜோதிராமன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகுளை தாமாக முன்வந்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தனிமை நீதிபதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அதை அவர் பார்ப்பதற்கு முன்பாகவே தானாக முன்வந்து தனி நீதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிவிட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வரும் 5ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here