மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.
சென்னை பெரம்பூரில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தனியார் பேருந்து மூலம் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என 30-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் சுற்றுலாவை முடித்து விட்டு இன்று இரவு மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் பவானிசாகர் காட்சி முனை பகுதியின் அருகே பேருந்து வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் நேற்று மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

தற்பொழுது காயம் அடைந்தவர்களுக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் காயம் அடைந்தவர்கள் சிலரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.