பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பள்ளிக்கரணையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காதலியின் அண்ணன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிக்கரணை டாஸ்மாக் கடை அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில், வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 4 பேர், அந்த வாலிபரை சுற்றி வளைத்து சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதை பார்த்து பொதுமக்கள் திரண்டதால், அந்த 4 பேரும் தப்பிச் சென்றனர்.

அப்போது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அந்த வாலிபரை, அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அந்த வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், அந்த வாலிபர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், படுகொலை செய்யப்பட்டவர் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் வயது (26) என தெரியவந்தது. மெக்கானிக் வேலை செய்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இவர், ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த பிபிஏ படித்த இளம் பெண்ணை காதலித்துள்ளார்.
இதனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த இளம்பெண்ணை எழும்பூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளார்.

பின்னர், தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். இதனால் பெண்ணின் குடும்பத்தினர் பிரவீன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். மேலும், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பள்ளிக்கரணை டாஸ்மாக் அருகே பிரவீன் நடந்து செல்வதை நோட்டமிட்ட இளம் பெண்ணின் அண்ணன் தினேஷ், அவரது நண்பர்கள் 4 பேர், அங்கு வந்து, பிரவீனை சுற்றி வளைத்தனர்.

அப்போது பிரவீனை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. இதை அடுத்து, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நெடுமாறன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாம்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த இளம்பெண்ணின் அண்ணன் ஜல்லடியன்பேட்டை சாய்கணேஷ் நகர் 2-வது பாகத்தை சேர்ந்த தினேஷ் வயது (23), அவரது நண்பர்கள் பள்ளிக்கரணை ராஜலட்சுமி நகர் 8-வது தெருவை சேர்ந்த ஸ்ரீராம் வயது (18).

பள்ளிக்கரணை விவேகானந்தர் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்த ஜோதிலிங்கம் வயது (25), சித்தாலப்பாக்கம் ஜெயா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்த விஷ்ணுராஜ் வயது (25), சித்தாலப்பாக்கம் எம்ஜிஆர் நகர் 2-வது தெருவை சேர்ந்த ஸ்டீபன் குமார் வயது (24) ஆகிய 5 பேரை நேற்று காலை கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.