மத்திய அரசின் மீது மு.க.ஸ்டாலின் சராமாரி குற்றச்சாற்று.! அடுக்கபடும் ஊழல் ரிப்போர்ட்.!

0
68

மு.க.ஸ்டாலின் அவர்கள் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருவாரூரில் நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இந்தியா என்ற கூட்டணி உருவாவதற்கு தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. கூட்டணி காரணமாக இருக்கிறதே என்ற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துள்ளது.

ஸ்டாலின்

அதனால் அவர் எங்கே போனாலும், அது சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொடியேற்று நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பல மாநிலங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எங்கே போனாலும் நாம் அமைத்துள்ள இந்தியா கூட்டணி பற்றி விமர்சனம் செய்து பேசி கொண்டிருக்கிறார். கொச்சைப்படுத்தி பேசுகிறார். அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய நம்முடைய தி.மு.க. பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. மோடி என்ன பேசுகிறார் தமிழ்நாட்டில் ஊழல் வந்து விட்டதாம். 9 வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த ஊழலை ஒழித்தே தீருவேன். இந்தியாவில் இருக்கக் கூடிய ஊழலை ஒழித்தே தீருவேன் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பிரதமர் மோடியை பார்த்து அடக்கத்துடன் கேட்க விரும்புவது ஊழல் பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்கக் கூடிய மோடிக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்போது வெளியே வந்து விட்டதே.

ஊழலை பற்றி பி.ஜே.பி. பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. சி.ஏ.ஜி. அறிக்கை இன்று என்ன சொல்கிறது? மத்திய அரசுக்கு கட்டுப்பட்டுள்ள அந்த அமைப்பு இது. ஒவ்வொரு வருடமும், அந்தஅரசின் நிலையைப் பற்றி அரசு செய்துள்ள செலவு பற்றி அதையெல்லாம் ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் சி.ஏ.ஜி.யின் வேலை. ஒன்றியத்தில் நடைபெறும் பா.ஜ.க. ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்ச லாவண்யம் பெருத்து போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. இப்போது சி.ஏ.ஜி. சொல்கிறது.

ஆக, இதில் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

1. பாரத மாலா திட்டம்

2. துவாரகா விரைவு பாதை கட்டுமான திட்டம்.

3. சுங்கச்சாவடி கட்டணங்கள்.

4. ஆயுஷ்மான் பாரத் திட்டம்.

5. அயோத்தியா மேம்பாட்டு திட்டம்.

6. கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம்.

7. எச்.ஏ.எல். விமான வடிவமைப்பு திட்டம்.

மோடி

இந்த 7 திட்டங்களிலும், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று மிகத் தெளிவாக எடுத்து சொல்லி உள்ளது. நிதியை கையாள்வதில் மோசடிகள் அரங்கேறி உள்ளது என்று அந்த அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு போலி செல்போன் நம்பர். அந்த நம்பர் 9999999999. இந்த போலி நம்பரில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு அதில் ஊழல் நடந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், சிகிச்சைப் பெற்ற நோயாளிகளில் 88,760 பேர் இறந்து விட்டனர். ஆனால் அவர்கள் இறந்த பிறகும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி 214923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டு தொகை வழங்கி இருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கி உள்ளனர். தகுதியில்லாத குடும்பங்கள், இந்த திட்டத்தின் பயனாளியாக பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.22 கோடியே 44 லட்சம் வரை மோசடி நடந்துள்ளது. இதை இந்தியா கூட்டணி சொல்லவில்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வறிக்கை வெளியிடக் கூடிய சி.ஏ.ஜி. அறிக்கை சொல்கிறது. அடுத்து துவாரகா விரைவு நெடுஞ்சாலை திட்டம். 1 கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்த செலவு ரூ.250 கோடியாக அதிகரித்து அதாவது திட்ட மதிப்பை விட 278 மடங்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமாயணம் தொடர்புடைய இடங்களை நவீனப்படுத்துவதற்காக ஒரு திட்டம் போட்டார்கள். இதில் விதிமுறைகளை மீறி ஒப்பந்ததாரர்களுக்கு தேவையற்ற சலுகைகள் தரப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. 8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாரத் மாலா திட்ட டெண்டர் முறைகேட்டை சி.ஏ.ஜி. அம்பலப்படுத்தி உள்ளது. ஒரு கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலை அமைக்க நிர்ணயித்ததை விட 2 மடங்கு அதிகமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 600 சுங்க சாவடிகள் இருக்கிறது. இதில் 5 சுங்கச் சாவடிகளில் மட்டும் சி.ஏ.ஜி. ஆய்வு செய்தது.  அதில் விதிகளுக்கு புறம்பாக 132 கோடியே 5 லட்சம் ரூபாய் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்துள்ளனர்.

ஸ்டாலின்

இதில் தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சுங்கச் சாவடியும் ஒன்று. இந்த ஒரே ஒரு சுங்கச் சாவடியில் மட்டும் ரூ.6½ கோடி முறைகேடாக வசூல் செய்துள்ளனர். அப்படியென்றால் நாடு முழுவதும் ஆய்வு நடத்தினால், பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது தெரிய வரும். இதை அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக் நிறுவனத்தின் விமான எந்திர வடிவமைப்பில் 159 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தோடு ஓய்வூதிய திட்ட பணத்தை எடுத்து ஒன்றிய அரசு விளம்பரத்துக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படி என்னென்ன முறைகேடுகள் எவ்வளவு கோடி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சி.ஏ.ஜி. அறிக்கைப்படி ஒன்றிய அரசு துறைகளில் 7 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. ஊழலை பற்றி உள்துறை மந்திரி அமித்ஷா அதிகம் கவலைப்படுகிறார். அதே போல் சென்ட்ரல் விஜிலன்ஸ் கமிஷன் என்ன சொல்கிறது என்றால் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் என்ன உள்ளது என்றால், ஒன்றிய அமைச்சகங்களிலேயே உள்துறை அமைச்சக அதிகாரிகள், அலுவலர்கள் மீதுதான் போன வருடம் அதிகமான ஊழல் புகார்கள் பதிவாகி இருக்கிறது என்று சொல்லி உள்ளனர். இதில் கடந்த ஆண்டு 1 லட்சத்து 15 ஆயிரத்து 203 புகார்கள் பதிவாகி இருக்கிறது. இதில் உள்துறை அதிகாரிகள் மீது மட்டும் 46,643 புகார்கள் பதிவாகி உள்ளது. இவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்று இன்று பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் செய்த தவறை எல்லாம் மூடி மறைத்து நம் மீது வீண் பழி சுமத்தி, இதுபற்றி எல்லாம் தி.மு.க. பேசுகிறதே என்று ஆத்திரம் ஏற்பட்டு கோபத்தில் எரிச்சலில் நம்ம பழி வாங்குவதற்காக சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மூலம் நம்மை மிரட்டிப் பார்க்கிறார்கள. இதையெல்லாம் கண்டு அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி விடுகிற கட்சி தி.மு.க. அல்ல. தி.மு.க. பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்சிவிட மாட்டோம். எமர்ஜென்சியை யே பார்த்தோம். எதிர்த்தோம். எதைப் பற்றியும் தி.மு.க. கவலைப்படவில்லை. இந்தியா என்ற கூட்டணியும் இதைப் பற்றி சிந்திக்க தயாராக இல்லை. லஞ்ச ஊழலை மூடி மறைக்க மதவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களை மட்டுமல்ல, இந்தியாவையும் இனி நீங்கள் ஏமாற்ற முடியாது.

அதற்காகத்தான் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது. இப்போது தமிழகத்தில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு கோடிக்கு குறையாமல், அதை விட அதிகமாகத்தான் வரும் என்று கணக்கு சொல்கிறது. இருந்தாலும், எவ்வளவு வந்தாலும் கவலையில்லை. யார்-யாருக்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு நிச்சயமாக அந்த தொகை சேரப்போகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here