நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி உயரதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்;-
நெல்லை காங்கிரஸ் கிழக்கு தலைவர் சந்தேக மரணம் தொடர்பாக இரண்டு கடிதங்கள் கிடைத்தன. அது தொடர்பாக 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் கால் பகுதி கம்பியால் கட்டப்பட்டு நடுவில் 15*50 அளவு கொண்ட கடப்பா கல் கட்டப்பட்டிருந்தது.

மேலும் அவரது வாயில் பாத்திரம் விளக்கும் ஸ்கிரப்பர் எடுக்கப்பட்டுள்ளது. எந்த வழக்கிலும் இல்லாத அளவில் இதில் பத்து தனிப்படைகள் டி.எஸ்.பிகள் தலைமையில் அமைக்கப்பட்டு, அதன் மூலம் புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
முழுமையான உடற்கூறு ஆய்வு அறிக்கை இதுவரை கிடைக்க பெறவில்லை. இடைக்கால ஆய்வறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது. சைபர் க்ரைம், தடய அறிவியல் துறை, கைரேகை நிபுணர் குழு என பல்வேறு அறிவியல் ஆய்வுகளும், சோதனைகளும் இந்த வழக்கில் நடந்து வருகிறது.

விசாரணை முழுமை பெறவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. ராமஜெயம் கொலை சம்பவம் பார்த்த உடனே அது கொலை என தெரிந்தது. ஆனால், இந்த சம்பவத்தில் கொலை என்றோ, தற்கொலை என்றோ உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த வழக்கு சந்தேகம் மரணம் என பதியப்பட்டு, அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த தகவலை வைத்து கொலையா, தற்கொலையா என எதையும் உறுதி செய்ய முடியவில்லை.

இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும். முதற்கட்ட பிரேத பரிசோதனையில் காயங்கள் இருந்ததாகவும், இறந்த உடலை எரித்ததாகவும் எந்த தகவலும் இல்லை.
ஆனால் இறுதி அறிக்கை முடிவிலேயே முழுமையான தகவல் தெரியவரும் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தை அறிவியல் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

டி.என்.ஏ சோதனை உட்பட பல்வேறு அறிக்கைகள் கிடைக்க வேண்டி உள்ளது. ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் பணம் தொடர்பான பிரச்சனை அரசியல் தொடர்பான பிரச்சனை என பல பிரச்சனைகள் உள்ளது.
குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சபாநாயகர் பெயரும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.

தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் முடிவு பெறும் என தெரிவித்தார். ஒரு வாரத்தில் இந்த வழக்கில் தெளிவு கிடைக்கும் என கூறினார்.