ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் வனப்பகுதியில் விழுந்து விபத்து குள்ளானது. அதில் அவர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் 9 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விபத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விமானப்படை முன்னாள் அதிகாரி கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் ஆன இப்ராஹிம் ரைசி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று சுமார் 28 மில்லியன் வாக்குகள் பதிவான அந்த தேர்தலில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் தலைமை நீதிபதியாகவும் துறையில் முக்கிய பங்காற்றியவருமான ரைசி கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார், இருந்தும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனார்.
இப்ராஹிம் ரைசி: 63 வயதான அவர் ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கையில் வைத்திருக்கும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்த பொறுப்பை கவனிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அவரது மரணம் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மதப்பற்று காரணமாக ஈரானில் பரவலான ஆதரவாளர்களைக் கொண்ட அவர் தற்போது அமைதியான ஆதரவையும் ராணுவம் சட்டமன்றத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார் .இந்த நிலையில் அவரது மரணம் உலக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட போது விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேற்று விபத்து நடந்த நிலையில் இன்று அவர் மரணம் அடைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளானது.
இது தொடர்பாக விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.

ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரும் விபத்தில் ஏற்பட்டு பலியாகி உள்ளனர்.
அவர்களது உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ள நிலையில், அதனை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடை அங்க அடையாளங்கள் மூலம் உடல்களை அடையாளம் காண முடியாதவாறு உடல்கள் எரிந்துள்ள நிலையில்,
டிஎன்ஏ பரிசோதனை மூலமே அவர்களது உடல்களை அடையாளம் காண முடியும் என மீட்பு குழுவினர் கூறியுள்ளனர்.

இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் செங்குத்தான மலைப்பாதையில் இருப்பதால் அவற்றை தரை பகுதிக்கு கொண்டு வந்து பின்பு மருத்துவமனையில் வைத்து டிஎன்ஏ பரிசோதனை மேற்கொண்ட பின்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த மீட்பு பணியில் ரஷ்யா மற்றும் துருக்கி மீட்பு குழுவின் பங்கு மிக அதிகமாக இருந்தது. சவாலான மலைப்பகுதியில் உடல்கள் இருந்த நிலையில் மீட்பு குழுவினர் மிக கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த இடத்தை அடைந்தனர்.
தற்போது உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை கீழ இறக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விபத்துக்கு காரணம் குறித்து, என்ன நடந்திருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

மாதேஸ்வரன் விளக்கம்: கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர் விமானப்படை வீரர்கள். இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியான மாதேஸ்வரன்;-
“ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதுக்கு மோசமான வானிலை இன்று ஒரே வரியில் முடித்து விட முடியாது. பனிப்பொழிவு அல்லது பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.
காரணம் அதிபர் உள்ளிட்டோர் பயணிக்கும் விமானம் என்பதால் ஏற்கனவே வானிலையை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போல் தான் பொசிஷன் எடுத்திருப்பார்கள்.

மேலும் ரேடார் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் பயணம் செய்யும் தூரத்தில் இருக்கும் வானிலையை கணித்து தான் பயணம் மேற்கொள்வார்கள். ஒரு வேளை பிரச்சனை ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து விலகி மற்றொரு பாதையில் பயணிக்க வைத்திருக்க முடியும்.
மேலும் அதிபர் உள்ளிட்டோர் பயணம் செய்யும் ஹெலிகாப்டர் என்பதால் மூத்த விமானிகளே அதனை இயக்கியிருப்பார்கள். எனவே தொழில்நுட்ப கோளாறும் இதற்கு காரணமாக இருந்திருக்க முடியாது.
அதே நேரத்தில் இடி, மின்னல் கனமழை போன்ற திடீர் பிரச்சனைகள் காரணமாகத்தான் விபத்து ஏற்படும். என்னை பொருத்தவரை பனிமூட்டம் அல்லது பனி பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என மாதேஸ்வரம் தெரிவித்துள்ளார்.