திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி காட்டுப்பள்ளி குப்பம் மீனவ கிராம மக்களை மீண்டும் பணியமர்த்த மறுக்கும் எல்&டி மற்றும் அதானி துறைமுக நிறுவனங்களை கண்டித்தும்,
நிறுவனங்களுக்கு கை கூலிகளாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொன்னேரி தொகுதி நிர்வாகத்தை கண்டித்தும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தேர்தல் புறகணிப்பு போராட்டம்.

கிராம மக்களுக்கு ஆதரவாக ஊராட்சி முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு. சமூக வலைதளங்களில் பரவும் இது குறித்த போஸ்டர்களால் பழவேற்காடு பகுதியில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களும் காட்டுப்பள்ளி குப்பம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டும் தளம், துறைமுகம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.

கடந்த 2008 ஆம் ஆண்டு இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதால் வாழ்வாதாரம் பாதிப்பதாக காட்டுப்பள்ளி பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 150 மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
வேலை வழங்கி கடந்த 15 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்து வருகின்றனர். அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் வேலை உறுதி வழங்க வேண்டும்.

நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஒட்டு மொத்தமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் தனியார் நிறுவன அதிகாரிகள் மீனவர்கள் கொண்ட குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுநாள் வரையில் இப்பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படாமல் இருக்கும் நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் தினமான 19 ஆம் தேதி அன்று காட்டுப்பள்ளி குப்பம் மீனவ கிராம மக்களை மீண்டும் பணியமர்த்த மறுக்கும் எல்&டி மற்றும் அதானி துறைமுக நிறுவனங்களை கண்டித்தும்,

நிறுவனங்களுக்கு கை கூலிகளாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொன்னேரி தொகுதி நிர்வாகத்தை கண்டித்தும், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நாடாளுமன்ற தேர்தல் புறகணிப்பு போராட்டத்தை கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.
இதற்கு மற்ற கிராம மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன் பேரில் தற்போது காட்டுப்பள்ளி ஊராட்சி க்குட்பட்ட மற்ற கிராமங்களும் தேர்தல் புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த பகுதியில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்கு செல்ல மாட்டார்கள் எனவும், உண்ணாவிரதப் போராட்டம் குறித்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
பழவேற்காடு பகுதியைச் சென்ற மற்ற மீனவ கிராமங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்ட மீனவர் பகுதி முழுவதிலும் பெரும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

போராட்டம் நடைபெறும் கிராமத்திற்கு வாக்காளர் அடையாள அட்டைகளை அஞ்சல் ஊழியர் கொண்டு வந்து மக்களிடம் கொடுக்கும் போது நாளை நாங்கள் ஓட்டு போட போவதில்லை எங்களுக்கு எதற்கு வாக்காளர் அடையாள அட்டை என அஞ்சல்காரரை திருப்பி அனுப்பினர்.