பிலிபித் தொகுதியில் பாஜக சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட வருண்காந்தி எழுதியுள்ள கடிதத்தில் உங்களுக்கு சேவை செய்ய எதற்கும் நான் தயார் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பிலிபித் மக்களவை தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் மேனகா காந்தி அல்லது அவரது மகன் வருண்காந்தி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்கள். மேனகா காந்தி 1989-ல் ஜனதா தளம் சார்பில் வெற்றி பெற்றார். கடந்த 1991-ல் தோல்வியடைந்தார். 1996-ல் மீண்டும் வெற்றி பெற்றார்.

மேலும் அவர் 1998 மற்றும் 1999-ல் இந்த தொகுதியில் இருந்து சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றார். கடந்த 2004 மற்றும் 2014-ல் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் வருண் காந்தி 2009 மற்றும் 2019-ல் பாஜக வேட்பாளராக வெற்றி பெற்றார்.
அவரது தாயார் சுல்தான்பூருக்கு மாறினார். இந்த முறை மேனகாவுக்கு மீண்டும் சுல்தான்பூர் தொகுதி பாஜக சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக மற்றும் உபி முதல்வர் யோகியை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வரும் வருண்காந்திக்கு பிலிபித் தொகுதி வழங்கப்படவில்லை.

அவருக்கு பதில் ஜிதின் பிரசாதா பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனவே வருண்காந்தி சமாஜ்வாடி, காங்கிரஸ் அல்லது சுயேட்சையாக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் மனுத்தாக்கல் முடியும் புதன்கிழமை வரை மனு செய்ய வரவில்லை. இந்த நிலையில் பிலிபித் தொகுதியில் போட்டியிடாதது குறித்து வருண்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது;- பிலிபித் தொகுதியுடனான உறவு, எந்த அரசியல் கணக்கீடுகளுக்கும் மேலாக அன்பும் நம்பிக்கையும் கொண்டது. இன்று நான் இந்த கடிதத்தை எழுதும் போது எண்ணற்ற நினைவுகள் என்னை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளன.
கடந்த 1983-ம் ஆண்டு முதன்முறையாக பிலிபித்திற்கு வந்த அந்த சிறிய 3 வயது குழந்தை என் நினைவுக்கு வருகிறது.

அப்போது எம்.பி-யாக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவுக்கு வரலாம். ஆனால் பிலிபித்துடனான எனது உறவை எனது கடைசி மூச்சு வரை நிறுத்த முடியாது. என் கதவுகள் எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும்.
அப்போது சாமானியர்களின் குரலை உயர்த்துவதற்காக அரசியலுக்கு வந்தேன். இந்த பணியை எப்போதும் செய்ய உங்கள் ஆசிர்வாதத்தை வேண்டி நிற்கிறேன். இதற்காக எந்த விலையையும் கொடுக்க நான் தயார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.