தனது மனைவியின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை அறிவித்த விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரனிடம் நேரில் சென்று இர்பான் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
“இர்பான் வியூஸ்’ என்ற யூடியூபில் உணவு தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் இர்பான். பிரம்மாண்டமான அசைவ உணவுகளை சாப்பிட்டபடி இவர் கொடுக்கும் ரிவியூக்கள் சமூக வலைதளங்களில் ஏக பிரபலம். இவரை யூடியூப் மற்றும் பேஸ்புக்கில் பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் யூடியூபர் இர்பான் உணவு ரிவியூக்கள் தவிர, தனது திருமணம் மற்றும் வீட்டில் நடந்த இனிய நிகழ்வுகளை அடிக்கடி தனது யூடியூப் சேனலில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

அப்படித்தான் தனக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளிநாட்டில் சென்று அறிந்துகொண்டு, அதை எல்லோருக்கும் அறிவித்து, அந்தக் கொண்டாட்டத்தையே வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது இந்தியாவில் PC-PNDT ACT 1994-ன்படி கடுமையான குற்றம் ஆகும். இந்த வீடியோ பெரிய சர்ச்சையாக மாறியது.
உடனடியாக விசாரணையில் இறங்கிய தமிழக சுகாதாரத்துறை குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட வீடியோ தொடர்பாக இர்ஃபான் மீதும், கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடுவர்கள் மீதும், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீதும் இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதிரடியாக அறிவித்தனர்.

பாலின விவகாரம் – யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்
இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்;- “யூடியூபர் இர்பான் என்பவர் தான் துபாய் சென்ற போது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின் போது அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து 19.05.2024 அன்று தனது யூடியூப் சேனலின் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் உள்ளனர்.
இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும், அறிவிப்பதும் பாலின தேர்வை தடை செய்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயலால், தமிழ்நாடு மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறையும்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகும் வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு,
மாநில அமலாக்க அலுவலர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரால் இர்பானுக்கு 21.05.2024 அன்று பாலினத்தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக குறிப்பாணை சார்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இர்பானால் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக நீக்கிட யூடியூப் தளத்திற்கும், சைபர் கிரைம் பிரிவிற்கும் 21.05.2024 நாளிட்ட கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள், ஆஸ்பத்திரிகள் மீது இந்த அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனக்கு பிறக்கும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டதற்கு சுகாதாரத்துறையிடம் இர்பான் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
இந்த விவகாரத்தில் இர்பானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், வாட்ஸ்அப் மற்றும் தொலைபேசி மூலம் மருத்துவ விசாரணை குழுவினரிடம் இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரனிடம் நேரில் சென்று மன்னிப்பு கடிதம் கொடுத்து இர்பான் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இர்பானின் மன்னிப்பு கடிதத்தை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டார்களாக இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
அதேநேரம் ஒருவேளை மன்னிப்பு கடிதத்தை ஏற்றுக்கொண்டால், 30 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் கொண்ட இர்பான் சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு காணொலியை வெளியிட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு இர்பான், சிசுக்கலைப்பு குறித்து விழிப்புணர்வு காணொலியை தனது யூடியூப் சேனலில் வெளியிட தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி நடப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியானால், இர்பான் விவகாரத்திற்கு சுகாதாரத்துறை முற்றுப்புள்ளி வைக்கும் என்கிறார்கள்.