தஞ்சாவூரில் வெளிநாட்டினரை பச்சைத் துண்டு போட்டு வரவேற்ற விவசாயிகள். கிராமத்தினருடன் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடிய வெளிநாட்டினர். பொங்கல் பண்டிகை கிராமிய கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.
தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா, தமிழரின் வாழ்வியலோடு, குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்த நன்றி தெரிவிக்கும் விழாவாகும். உழவர்கள் தமது உழைப்பிற்கும் தங்களுக்கு உதவிய இயற்கை மற்றும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழாவை கொண்டாடி வருகின்றனர்.

பயிர்த்தொழில் செய்பவர்களின் வாழ்வின் உற்பத்தி சார்ந்த இந்த விழா மத உணர்வும், இன உணர்வும் கடந்து பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாட்டின் வெளிப்பாடாகவே கொண்டாடப்பட்டு வருகின்றது.காலங்களில் பொங்கல் என்ற வார்த்தை நேரடியாக பயன்படுத்தப்படவில்லை என்ற போதிலும் அதற்கான மாற்று வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் இது ‘அறுவடை திருவிழா’ என்று அழைக்கப்பட்டது.
அதே நேரத்தில் தற்போது இந்த விழாவை ‘மகர சங்கராந்தி’ என்று பிற மொழி பேசுபவர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். தை மாதம் முதல்நாள் உழவர் திருநாளாக மூன்று நாட்களாக கொண்டாடப்படுகிறது.

முதல்நாளாக பொங்கல் பண்டிகையும், இரண்டாம் நாளாக உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் மாட்டுப்பொங்கல் விழாவாகவும் மூன்றாம் நாள் உழவர் திருநாளாகவும், கானும் பொங்கலாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொங்கல் பண்டிகை பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடபட்டு வரும் நிலையில் தஞ்சையை அடுத்த தென்னமநாடு கிராமத்தில் வெளிநாட்டினர் கொண்டாடிய கிராமத்து பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
மேலும் பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து ஆகிய வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தென்னமநாடு கிராமத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். முன்னதாக கிராமத்திற்கு வந்த வெளிநாட்டினருக்கு பச்சை துண்டு அணிவித்து நெற்றியில் திலகம் இட்டு விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்றனர்.

பின்னர் தப்பாட்டம், புலியாட்டம், கோலாட்டம் ஆகிய பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளை கண்டு தாங்களும் அவர்களுடன் ஆடி மகிழ்ந்தனர். இதில் அப்பகுதி கிராம பொதுமக்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை உற்சாகமாக கொண்டாடினர்.