பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:- இன்றைக்கு அதிமுக என்ற அற்புதமான கட்சியை தங்களின் சுய லாபத்துக்காக, அதிகார வெறிக்காக கூட இருக்கிற 2 பேரை பத்திரிகைகளில் பேச வைத்து எப்படியாச்சும் அதிமுகவை காப்பாற்றி விடலாம் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கனவு கண்டு கொண்டிருக்கிறார்.
சுயலாபத்துக்காக அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகி என்ற பெயர் பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்குதான். பிரதமர் மோடியின் முதுகில் குத்தியவர் எடப்பாடி. பிரதமர் டெல்லியில் அழைத்து சென்று பக்கத்திலே உட்கார வைப்பார்.

ஆனால் இங்கு வந்து சுயலாபத்திற்காக இதைவிட அக்கறை பச்சை, இந்த கரையை விட அந்த கரைக்கு போய்விடலாம் என்பதற்காக பாஜக வேண்டாம் என்று ஒதுங்கி சென்றவர் தான் எடப்பாடி பழனிசாமி. அதற்கு மக்கள் என்ன பாடம் புகட்டினார்கள். பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தார்கள்.
தமிழகத்தில் அரசியல் வரலாற்றில் இவ்வளவு பெரிய கட்சி, நம்பர் 2 கட்சி, நம்பர் 1 கட்சி, ஆளும் கட்சியாக இருந்து எத்தனை இடங்களில் டெபாசிட் இழந்திருக்கு. ஒரு கின்னஸ் ரெக்கார்டாக அத்தனை இடங்களில் அதிமுக டெபாசிட் இழந்திருக்கு.

காரணம் அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும் கூட தலைவர்கள் சரியில்லை. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்கு நாங்கள் இபிஎஸ் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலில் 134 வாக்குறுதிகளை அளித்தார். எப்ப நிறைவேற்றபோகிறார். இன்று எதிர்கட்சி தலைவராக இருக்கிறார்.
கோவைக்கும், தமிழகத்திற்கு நாங்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு 134 வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறார். எப்ப நிறைவேற்றுவார். எம்பி இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார். எங்கு சென்று பேசுவார். பேசுவதற்கு முன்பே சிந்தித்து பேசவேண்டும்.

கோவையில் அதிமுக 13 ஆயிரம் ஓட்டுகள் வாங்கி டெபாசிட் தக்க வைத்தார்கள். வெறும் டெபாசிட் வாங்கின கட்சி பாஜகவை குறை சொல்கிறார்கள். கோவை உங்களது கோட்டைதானே, 10-க்கு 9 எம்எல்ஏ வைத்திருக்கிறீர்கள். 6-க்கு 6 மாநகரத்தில் எம்எல்ஏ உங்களது தானே. எதற்கு 17 சதவீதத்திற்கு போனீங்க.
உங்களைவிட 2 மடங்கு 34 சதவீதத்துக்கு மேல பாஜக ஓட்டு வாங்கிருக்கு. கோவையில் 6 எம்எல்ஏக்களை வைத்துகொண்டு 3 சட்டமன்ற தொகுதியில் டெபாசிட் இழந்திருக்கு. சிங்காநல்லூர் அவருடைய வேட்பாளர் இருக்கக்கூடிய சொந்த தொகுதி டெபாசிட் போயிருக்கு.

எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறுகிறார். அவங்க கட்சி கண்முன்னே கரையானை போல் கரைந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி கண்ணாடியை எடுத்து முகத்தை நன்றாக பார்க்க வேண்டும்.
நல்லா பார்த்துகிட்டா அதிமுகவின் பொதுச்செயலாளராக எப்படி இருக்க வேண்டுமென்று கண்ணாடி அறிவுரை சொல்லும். ஆகையால் எனக்கு அறிவுரை கூறவேண்டாம். அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்கு நாங்கள் இபிஎஸ் இல்லை. விக்கிரவாண்டி இடைதேர்தலை புறக்கணிக்க நீங்க சொன்ன காரணம் என்ன?

இதே மாநில தேர்தல் ஆணையம் 2026 சட்டமன்ற தேர்தல் நடத்தும் போது புறக்கணிப்பாரா?. புது, புது காரணங்களை கண்டுபிடித்து சொல்லும் வித்தகராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக மக்களுக்கு பொறுப்புள்ள எதிர்கட்சி தலைவராக அவர் செயல்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.