நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் நான் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சியை தொடர்கிறேன் என்று திமுக ஆட்சியின் 4 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதை அடுத்து, மே 7 ஆம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். முதல்வராக அவர் பொறுப்பேற்று நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திமுக அரசின் 4-வது ஆண்டு தொடங்கியுள்ளது.

இதனையொட்டி, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
அதை தொடர்ந்து, தலைமை செயலகம் வந்த முதல்வருக்கு, அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பிறகு, அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, காணொலியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;-
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் உங்கள் நல்லாதரவையும், நம்பிக்கையையும் பெற்று, நம் மாநிலத்துக்கு முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று,

4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாள் மே 7 ஆம் தேதி. இந்த 3 ஆண்டுகளில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்ன என்பதை தினந்தோறும் பயன்பெற்ற மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.
இதை நான் சொல்வதை விட பயன்பெற்ற மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. ‘‘மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ரூ.1,000 இருக்கிறது. வேலைக்கு போகாவிட்டாலும், பெற்ற பிள்ளை கொடுக்காவிட்டாலும், ஸ்டாலின் எங்களுக்கு மகனாக கொடுக்கிறார்’’ என்கின்றனர்.

‘‘மகளிர் சுயஉதவி குழுவால் முன்னேறி உள்ளோம். நாங்கள் மாதம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை தான் சம்பளம் வாங்கினோம். இன்று, ஒருவருக்கு மட்டும் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் வருமானம் வருகிறது’’ என்கின்றனர்.
‘‘ரூ.1 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு வட்டி போடுகின்றனர். ஆனால், நம் வங்கி கணக்கில் அரசு பணம் போடுகிறது. குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டினால், மீண்டும் அழைத்து கடன் தருகிறது’’ என்று சொல்கின்றனர்.

மகளிருக்காக வீட்டு வசதி திட்டத்தை அரசு செய்து கொடுக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தங்க ஏற்பாடு செய்துள்ள தோழி விடுதி திட்டம் மிகவும் பெரிய விஷயம் என்றும் கூறுகின்றனர்.
அதேபோல, கட்டணமில்லா பேருந்து பயணத்தை தந்து தாயைப்போல யோசித்துள்ள முதல்வருக்கு நன்றி என்றும் கூறுகின்றனர்.

ஒரு பெண், ‘‘எனது மகள் காலையில் சாப்பிட அடம் பிடிப்பாள், இப்போதெல்லாம் காலையில் உணவை விரும்பி சாப்பிடுகிறாள். அதுவும் பள்ளியில் சிறுதானிய உணவு வழங்குவதால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து அளிக்கும் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் மூலம் இது சாத்தியமானது’’ என்கிறார். சுய தொழில் கடனுதவி திட்டம், இதுவரை தொழிலாளியாக இருந்த எங்களை ஆட்டோ முதலாளியாக மாற்றி உள்ளது என்றும் கூறுகின்றனர்.

‘‘நான் 12-வது படிக்கும் போது கேன்சரால் அப்பா உயிரிழந்துவிட்டார். அதற்கு பிறகு அம்மா தான் என் தேவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்.
முதல்வரின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தை அறிமுகம் செய்தார்கள். இன்று எனது கனவு நனவாகிவிட்டது. இந்த திட்டங்கள் நாளைய இந்தியாவை வடிவமைக்கும்’’ என ஒரு மாணவர் கூறுகிறார்.

‘புதுமைப்பெண்திட்டம் மூலம் மாதம்தோறும் கிடைக்கும் ரூ.1000 மிகவும் உதவியாக இருக்கிறது. அதை வைத்து தான் துணிமணி வாங்கி வருகிறோம் என்கிறார்’’ ஒரு மாணவி. மேலும், திருநங்கைகளுக்கு 3 சென்ட் இடம் கொடுத்து ஒரு தனி வீடும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கணவனால் ரேஷன் கார்டு, அடையாள அட்டைகளை இழந்த குடும்ப தலைவிகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 ஆண்டுகளில் ஸ்டாலின் என்றால் செயல், செயல், செயல் என நிரூபித்துக் காட்டியுள்ளேன்.

இது எனது அரசு அல்ல. நமது அரசு. அந்த வகையில் நமது அரசு 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சி பயணத்தை உங்கள் வாழ்த்துகளுடன் தொடர்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.