மோடி

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டின் பக்கம் தேசிய தலைவர்களின் பார்வையும் திரும்பியுள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே 6 முறை தமிழகத்திற்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் 7 ஆவது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார்.

பிரதமர்

பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை (ஏப்ரல் 9) தமிழகம் வந்தார். தமிழக பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி வந்தார். காவி தாமரையை கையில் பிடித்த படி வந்த நிலையில், ரோடு ஷோவில் பங்கேற்றார் மோடி. மேலும் சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்றார். மோடி ரோடு ஷோ: சென்னை பனகல் பூங்கா முதல் பாண்டி பஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது.

திமுக ஆர் எஸ் பாரதி

பாஜக வேட்பாளர்கள் பால் கனகராஜ் (வடசென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக மோடி வாக்கு சேகரித்தார். பாஜக வேட்பாளர்கள், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரும் மோடி உடன் பிரச்சார வாகனத்தில் நின்றபடி இருந்தனர்.தேனாம்பேட்டை சிக்னல் அருகே ரோடு ஷோ நிறைவடைந்தது. சுமார் 45 நிமிடங்களில் சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் மோடி. இதையடுத்து, அங்கிருந்து கார் மூலம் ஆளுநர் மாளிகை சென்றார் பிரதமர் மோடி. நேற்று முன்தினம் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை சென்னையில் இருந்து வேலூருக்கு ஹெலிகாப்டரில் கிளம்பிச் சென்று அங்கு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் சென்று பாஜக வேட்பாளார்களுக்கு வாக்கு சேகரித்தார். ஆளுநர் மாளிகையில் தங்கிய மோடி: ரோடு ஷோவுக்கு பின்னர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்கள் தரும் ஆதரவு எனக்கு மேலும் வலுவைத் தருகின்றது; சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், NDA கூட்டணிக்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர் என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்தார்.

அண்ணாமலை மோடி

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் மோடி சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் தங்கி, பாஜகவினரை சந்தித்தது தேர்தல் ஆணைய விதி மீறல் என திமுக குற்றம்சாட்டியுள்ளது. திமுக ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்: மீஞ்சூரில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, “தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்கு வந்த பிரதமர் மோடி, தேர்தல் விதிகளை மீறி நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது? ஆளுநர் மாளிகையில் தங்கி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதுவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பரப்புரைக்கு செல்லும் வழியில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினால் என்னென்ன சொல்லி இருப்பார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மோடி

தேர்தல் விதிமுறை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு பிரதமர், அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணங்களை தேர்தல் வேலைகளுடன் இணைக்கக் கூடாது. தேர்தல் பணியின்போது அதிகாரப்பூர்வ இயந்திரங்கள் அல்லது பணியாளர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதேபோல ஓய்வு இல்லங்கள், அரசு தங்குமிடங்கள் அதிகாரத்தில் உள்ள கட்சி அல்லது அதன் வேட்பாளர்களால் ஏகபோகமாகப் பயன்படுத்தக்கூடாது. அத்தகைய தங்குமிடங்களை மற்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நியாயமான முறையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தேர்தல் விதி. அதாவது, பிரதமரோ, அமைச்சரோ, ஆளுங்கட்சியினரோ தேர்தல் நேரத்தில் அரசு இல்லங்களில் தங்கலாம், ஆனால், அதே வாய்ப்பு மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் தான் தேர்தல் பிரச்சாரம் செய்ய தமிழகம் வந்த பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் தங்கியது குறித்து திமுக விமர்சித்துள்ளது.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here