சபரிமலை குறித்து தவறான தகவல்களை பரப்பி பக்தர்களை வரவிடாமல் தடுக்க சதி நடந்ததாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டசபையில் கூறினார். சபரிமலையில் வழிபாடு மேற்கொள்ள முடியாமல், தாங்கள் அணிந்த புனித மாலையை அகற்றியவர்கள், உண்மையான பக்தர்களாக இருக்க மாட்டார்கள் என கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ வின்சென்ட் கூறியதாவது:- சபரிமலையில் இம்முறை பக்தர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகினர். அப்போது தேவையில்லாமல் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதால் தினமும் 20 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் உணவு, குடிநீர் உள்பட எந்த வசதியும் கிடைக்காமல் பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதனால் ஏராளமான பக்தர்கள் பம்பை, பந்தளம் உட்பட பல்வேறு கோயில்களில் மாலையை கழட்டி விட்டு தரிசனம் செய்ய முடியாமல் வேதனையுடன் திரும்பினர். இவ்வாறு அவர் கூறினார். இதற்கு கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- சபரிமலையில் இம்முறை கட்டுக்கடங்காத வகையில் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் 52 லட்சத்திற்கும் அதிகமானோர் சபரிமலை வந்தனர்.

இதனால் சில நாட்களில் போலீசார் பக்தர்களை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் இல்லாவிட்டால் நெரிசல் மூலம் அசம்பாவித சம்பவங்கள் நடந்திருக்கும். அதனால் பக்தர்களுக்கு சில சிரமங்கள் ஏற்பட்டிருக்கலாம். உண்மையான பக்தர்கள் யாரும் தரிசனம் செய்யாமல் திரும்ப மாட்டார்கள். சில பொய்யான பக்தர்கள் தான் சபரிமலையில் தரிசனம் செய்யாமல் மாலையை கழட்டி விட்டு திரும்பி இருப்பார்கள்.
வேறு மாநிலங்களில் பக்தர்களை போலீசார் தாக்கிய சம்பவங்களை சபரிமலையில் நடந்ததாக கூறி பொய்யான தகவல்களை சிலர் பரப்பினர். இதன் மூலம் சபரிமலைக்கு பக்தர்களை வரவிடாமல் தடுக்க சதி நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். இது போன்ற பொய் பிரசாரங்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.