காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு விடுவதை தவிர்த்து சத்துணவு ஊழியர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்திட்டு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு காலை உணவு திட்டத்தை தனியாருக்கு கொடுப்பதை கைவிட்டு சத்துணவு ஊழியருக்கே வழங்க வேண்டும், எரிபொருள் மானியம் உயர்த்தியோ அல்லது எரிவாயு உருளையை அரசே வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பென்ஷன் திட்டம் குறைந்தபட்சம் 6,750 ரூபாய் அகவிலை மணியுடன் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சத்துண ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அளவிலான சத்துணவு ஊழியர்கள், ஒன்றியம் வாரியாக இன்று முதல் ரத்த கையெழுத்து மனுவை அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கோவை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்துக்கு வந்த சத்துணவு ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவரவர்களின் ரத்தத்தால் கைரேகை வைத்து கையெழுத்துட்டு வருகின்றனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த போராட்டம் வரும் 29ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ள சத்துணவு ஊழியர்கள், வரும் 30ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து ரத்த கையெழுத்திட்ட மனுவை வழங்குவதோடு மாவட்ட ஆட்சியர் மூலம் முதல்வருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் உள்ள சத்துணவு ஊழியர்கள் சுமார் 2000 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.