கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கடைசி வாய்ப்பு அறிவித்த அரசு

0
106
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

விடுபட்டுப்போனவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க, குறிப்பிட்ட தேதிகளில் வர முடியாதவர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 18) முதல் 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் முகாமை முதல்வர் ஸ்டாலின் ஜூலை 24 ஆம் தேதி தர்மபுரியில் தொடங்கி வைத்தார். இதையடுத்து விண்ணப்பப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் முதற்கட்டமாக 20765 ரேஷன் கடைகளில் இருக்கும் ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. 24.7.2023 முதல் 04.8.2023 வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன் பிறகு 05.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெற்றன. 2 ஆம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 1.54 கோடி விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.

இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தின் பெண்களும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் குறித்து ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு. இதில் கடுமையாக உடல் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால், பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையின் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலும், அமைப்புசாரத் தொழிலாளர் நல வாரியத்திலும் முதியோர் ஓய்வூதியம் பெற்றதால், அக்குடும்பத்தில் உள்ள பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறலாம் என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், ஏற்கனவே நடைபெற்ற முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர இயலாதவர்கள், விடுபட்ட நபர்கள் ஆகஸ்ட் 18, 19, 20 ஆகிய 3 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள், 3 நாட்கள் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 36,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கண்ட வகை குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை, என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here