தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண், போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி கமிஷனர் சங்கர் மற்றும் போதை தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் போதைப்பொருளை ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையம், ரயில் நிலையம், பஸ் நிலையங்கள் என அண்டை மாநில எல்லைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் போது, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விட இன்னும் அதிகமாக கண்காணித்து போதைப்பொருள் கடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் துறைவாரியாக செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.