பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில் அருகாமையில் உள்ள 11 கிரவுண்ட் இடத்தை போலியாக புனையப்பட்ட உயிலின் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்ற மோசடி பேர்வழி கைது.
சென்னையை சேர்ந்தவர் காலம் சென்ற பத்மினி சந்திரசேகர். இவர் 1975 ஆண்டு பல தொண்டு காரியங்களுக்காகவும், குறிப்பிட்ட சிலரின் நலனுக்காகவும் உயில் ஒன்றை எழுதியுள்ளார்.
மேலும் தனது மறைவுக்குப் பின் உயிலை அவர் குறிப்பிட்டது போல் நிறைவேற்றுவதற்காக மூத்த இந்திய ஆட்சிப் பணியாளர் (I.A.S) ஒருவரையும் மூத்த வழக்கறிஞரையும் நிறைவேற்றுபவர்களாக நியமித்துள்ளார்.
அவ்வாறு இருக்கும் நிலையில் அவர் கூறியது போல் 1995 ஆண்டு உயில் சான்றளிக்கப்பட்டு அதில் கூறியுள்ளது போல் ஒரு பகுதி சொத்தினை 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றுபவர்கள். தற்போதைய உரிமையாளர்களுக்கு கிரையம் செய்துள்ளனர்.

இவ்வாறு இருக்கும் நிலையில் 28 ஆண்டுகள் கழித்து கடந்த 2023 ஆண்டு திடீரென்று கடலூரைச் சேர்ந்த பாஸ்கர் என்ற நபர் அவர் காலம் சென்ற பத்மினி சந்திரசேகரின் உறவினர் என்று கூறியும் உயில் 1980 ஆம் ஆண்டு எழுதப்பட்டது என்று போலியாக ஒரு உயிலை புணைந்துள்ளார்.
மேலும் அவ்வுயிலை சான்றளிப்பதற்காக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பம் தொடர்ந்து உள்ளார். ஆனால் அவ்வுயில் மோசடியாக புனையப்பட்டுள்ளது என்று கூறி அவ்விண்ணப்பத்தை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இருப்பினும் பாஸ்கர் தனது மனைவி சரோஜாவிற்கு உயிலில் குறிப்பிட்டுள்ள சொத்தை பொய்யான வழக்கு என கூறி, அவ்வுயில் சான்றளிக்கப்பட்டது என சார் பதிவாளர் அலுவலகத்தில் தான செட்டில் மெண்ட் செய்து ஆவணத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும் வேளச்சேரி தாசில்தார் நந்தகுமார் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்யாமல் அவ்விடத்திற்கு சரோஜா பெயரில் பட்டா வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து தெரிய வந்தப்பின் நிலத்தின் உரிமையாளர்கள் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.

அதனை மத்திய குற்ற பிரிவுத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில் பாஸ்கரை நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையாளர் சச்சிதானந்தம், தலைமையில் மத்திய குற்றப்பிரிவு துணை காவல் ஆணையாளர் ஆரோக்கியம், கூடுதல் துணை காவல் ஆணையாளர் முத்துவேல் பாண்டி அடங்கிய குழு அவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி உள்ளனர்.

மேலும் இவ்வாறு நிலங்களை அபகரிக்க குற்றமுறு சதியில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பதையும் எந்தெந்த வருவாய் அதிகாரிகள் கையூட்டு பெற்று இவ்வாறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை குறித்தும் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
போலியாக புனையப்பட்ட உயிலின் மூலம் 11 கிரவுண்ட் நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.