தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’
கடந்த 2022 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தாளான செப்.15 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் 1,545 பள்ளிகளை சேர்ந்த 1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.

இதனை அடுத்து, இந்த திட்டத்தின் வரவேற்பின் காரணமாக கடந்தாண்டு அக்.25 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த இடமான திருக்குவளையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ‘முதல்வரின் காலை உணவு திட்டம்’ அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தாளான இன்று திருவள்ளூர் மாவட்டம், அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் மொத்தமுள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் பயிலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைய உள்ளனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார்.
காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். முன்னதாக காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார்.