மக்களவை தேர்தலின் முதல் கட்ட பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. கடைசி நாளான நேற்று, இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிரச்சாரம் செய்தனர்.
பின்னர் ராகுல் காந்தி கூறியதாவது;- உத்தரபிரதேசத்தில் இண்டியா கூட்டணி போட்டியிட வேண்டும் என முடிவு செய்தோம். இதற்காக திறந்த மனதுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டோம்.

இந்த விவகாரத்தில் நெகிழ்வு தன்மையை காட்ட விரும்பினோம். அதனால் தான் கூட்டணி கட்சிக்கு கூடுதல் இடம் கொடுத்துளோம். அதை காங்கிரஸின் பலவீனமாக பார்க்கக் கூடாது.
இங்கு காங்கிரஸ், சமாஜ்வாதி இடையிலான கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. வருகிற மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். பிற மாநிலங்களிலும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே, மத்தியில் ஆளும் பாஜக 150 தொகுதிகளைக் கூட தாண்டாது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஏழைகள் நலனுக்காக எதுவுமே செய்யவில்லை. அதேநேரம் 20 முதல் 25 தொழிலதிபர்களுக்கு சலுகைகளை வழங்குகிறார்.
நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் உள்ள சொத்துக்கு நிகரான சொத்து இந்த 25 பேரிடம் குவிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறும் போது,

காஜியாபாத் முதல் காஜிபூர் வரையில் பாஜகவை இண்டியா கூட்டணி தோற்கடிக்கும். எதிர்க்கட்சிகளில் வாரிசு அரசியல் இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
பாஜகவைச் சேர்ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டோம் என அக்கட்சியால் உறுதி அளிக்க முடியுமா? தேர்தல் பத்திர திட்டம் பாஜகவின் மோசடியை அம்பலப்படுத்தி உள்ளது. அனைத்து ஊழல்களின் மொத்த உருவமாக பாஜக உருவெடுத்துள்ளது” என்றார்.