வருகிற மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்றும், பாஜக மட்டுமே குறைந்தபட்சம் 370 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- பாஜக கூட்டணி 3-வது முறையாக ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போது மக்களின் மனநிலையை என்னால் அளவிட முடியும்.

எனவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடங்களுக்கு அதிகமாகவும், பாஜகவுக்கு குறைந்தபட்சம் 370 இடங்களிலும் வெற்றி கிடைக்கும். தற்போது எதிர்க்கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை இழந்து விட்டன. அவர்கள் எடுத்துள்ள தீர்மானத்தை நான் பாராட்டுகிறேன்.
அவர்கள் பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும், நீண்ட காலத்திற்கு அவர்கள் எதிர்கட்சி வரிசையிலேயே அமர விரும்புவதை உறுதிபடுத்தி உள்ளன. பின்பு நீண்ட காலம் நீங்கள் ஆளும்கட்சி இருக்கைகளில் அமர்ந்திருந்தீர்கள். இப்போது நீண்ட காலமாக எதிர்க்கட்சிகள் இருக்கையில் இருக்க முடிவு செய்துள்ளீர்கள்.

அப்போது மக்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள். எனவே விரைவில் நீங்கள் பொதுமக்களுடன் சேர்ந்து அவர்களுக்கான பார்வையாளர்கள் பகுதிக்கு மாறிவிடுவீர்கள். பின்னர் எதிர்க்கட்சியின் தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். நல்ல எதிர்க்கட்சியாக இருக்க காங்கிரசுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டனர். இந்த நாட்டை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். பின்னர் தலைவர்கள் மாறினாலும் அதே கலாச்சாரம் மாறாமல் தொடர்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஓபிசி பிரிவினருக்கு அநீதி இழைத்தது.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தலைவர்களை அவமதித்தனர். பாஜக தலைமையில் 3-வது முறையாக அமையும் ஆட்சியில், இந்தியா உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும். இது மோடியின் உத்தரவாதம். எங்களின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகளை எடுத்து, அடுத்த 1000 ஆண்டிற்கான வளமான இந்தியாவிற்கான அடித்தளம் இடுவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த அரசு நிறைவேற்றிய பணியை செய்ய காங்கிரசுக்கு குறைந்தது 100 ஆண்டுகள் ஆகியிருக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.