ராமேஸ்வரம் வந்தார் அமித்ஷா.! அண்ணாமலையின் பாதயாத்திரை ஆரம்பம்..!

3 Min Read
அமித்ஷா

“என் மண், என் மக்கள்” என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குயுள்ளார். பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் பாத யாத்திரையில் பங்கேற்கலாம் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 10 மாதம் உள்ள நிலையில் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பிலான பாதயாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொள்கிறார் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கிவுள்ளார் அண்ணாமலை.

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமானம் மூலம் மதுரைக் வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், ராமேஸ்வரம் வந்த அமித்ஷா, பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்றார்.

பாதயாத்திரை தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும், சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டுள்ளார்.

இதனிடையே பாதயாத்திரை தொடக்கவிழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வரவேண்டும் என்பதற்காக தமிழ் மக்களின் ஆதரவை பெற பாதயாத்திரையை நடத்த உள்ளதாகக் கூறினார். பாதயாத்திரை தொடக்க விழாவில், “பிரதமர் மோடி என்ன செய்தார்” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார்.

தொடக்க விழாவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யார் வேண்டுமானாலும் பாத யாத்திரையில் பங்கேற்கலாம் என்று கூறியுள்ளார் அண்ணாமலை. இந்த பாதயாத்திரை தொடங்கப்படுவது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில், இது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தளபதிகள் நிகழ்த்தும் ஒரு நடை பயணம். இது தமிழ்த்தாயை தலைநிமிரச் செய்யும் ஒரு நடைபயணம்.
இது சாமானியர்களின் கையால் தீய சக்திகளின் சூரசம்காரம் தொடங்கிவிட்டது என்று உணர்த்தும் ஒரு நடை பயணம். இது தமிழகம் எங்கும் ஒளிரும் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கொண்டாட ஒரு நடை பயணம்.

இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ராமேஸ்வரத்தில் இன்று தொடங்கியுள்ள பாதயாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடைகிறது. தமிழகம் முழுவதும் 6 மாதங்கள் பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, 225 ஊர்களில் மக்களை சந்திக்கிறார். பாதயாத்திரை தொடங்கிய 110 ஆவது நாளில் சென்னையில் பாதயாத்திரையை நிறைவு செய்கிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசுகிறார்.

50 ஆவது நாள் நடைபயணம் பரமத்தி வேலூரிலும், 100 ஆவது நாள் நடைபயணம் வந்தவாசி மற்றும் உத்திரமேரூரிலும் நடைபெற உள்ளது. அட்டவணையின்படி ராமநாதபுரத்தில் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரை தொடங்கும் அண்ணாமலை, அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

31 ஆம் தேதி சிவகங்கை செல்லும் அண்ணாமலை மானாமதுரை, திருப்பத்தூர், அறந்தாங்கி, திருமயம் வழியாக ஆகஸ்ட் 3 ஆம் தேதி காரைக்குடி செல்கிறார். பின்னர் மதுரை மாவட்டத்தில் 4, 5 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் அண்ணாமலை 6 ஆம் தேதி ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து மதுரையில் 7ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை உரையாற்றுகிறார். பின்னர் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 14 ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதையடுத்து கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் வழியாக மேற்கு மாவட்டங்களுக்கு செல்கிறார். அக்டோபர் மாதங்களில் மத்திய மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார்.

நவம்பர் மற்றும் டிசம்பரில் வடக்கு மாவட்டங்களில் நடைபயணம் செய்யும் அண்ணாமலை அடுத்த ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் புனித தலம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டுள்ளனர். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்களின் வாகனங்கள் ராமேஸ்வரம் நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.

Share This Article
Leave a review