NLC – எந்தெந்தக் கட்சி., என்னென்ன நிலைப்பாடு.! ஓர் விரிவான அலசல்.!

0
42
NLC பெயர் பலகை

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் விவகாரத்தில் எந்தெந்த கட்சிகள் என்னென்ன நிலைப்பாட்டில் உள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

திமுக:
ஆளுங்கட்சியாக உள்ள திமுக என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால் அரசுத் தரப்பின் விளக்கமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜின் குரல் ஒலித்து வருகிறது.

அதிமுக:
என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தவேக் கூடாது என அதிமுக சொல்லவில்லை. நில எடுப்பில் இறங்குவதற்கு முன் ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று தான் அரசை அதிமுக கேட்கிறது. இது குறித்து நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி விடுத்த அறிக்கையில் கூட, ”விவசாயிகளின் கோரிக்கையான மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு; சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு; வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை ஆகியவற்றிற்கு நிரந்தரமான முடிவை எடுத்துவிட்டு நில எடுப்பில் இறங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்தை வலியுறுத்துகிறேன் ” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ. அருண் மொழித்தேவன் என்.எல்.சி. கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வகையில் மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

காங்கிரஸ்:
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் சொந்த மாவட்டமாகும்.
இருப்பினும் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அவரிடமிருந்து பெரியளவில் எதிர்ப்பை பார்க்க முடியவில்லை. இது தான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.

பாஜக:
என்.எல்.சி. மத்திய அரசு நிறுவனம் என்பதால் பாஜக அந்நிறுவனத்துக்கு எதிராக வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த கிராம மக்களை டெல்லி அழைத்துச் சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கடந்த மார்ச் மாதம் கூறி வந்த பாஜக,
அதன் பிறகு ஏனோ தெரியவில்லை சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டது. இதனிடையே பொது நன்மைக்காகவே என்.எல்.சி. நிலம் எடுப்பதாக கடந்த மார்ச் மாதம் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது

.

பாமக:
என்.எல்.சி.க்கு எதிராக மிக ஆக்ரோஷமாக செயல்பட்டு வரும் ஒரே கட்சி பாமக மட்டுமே. நானா? நீயா? என பார்த்துவிடுகிறோம் என என்.எல்.சி.யுடன் மல்லுக்கட்டி வருகிறது பாமக. என்.எல்.சி. தமிழ்நாட்டுக்கு தேவையா என கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, அதனை கடலூர் மாவட்டத்திலிருந்து வெளியேற்றாமல் ஓயமாட்டேன் என போராடி வருகிறார். நிலம் கையகப்படுத்துதலை கண்டித்து பாமக போராட்டங்களை நடத்தி வருகிறது.

கம்யூனிஸ்ட்:
என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதலை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் பெரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்பதால் அவ்வப்போது என்.எல்.சி.க்கு எதிராக குரல் கொடுப்பதுண்டு. இதில் ஹைலைட் என்னவென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாகும்.

மதிமுக:
ஒரு காலத்தில் தமிழக உரிமை பிரச்சனைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுத்து வந்த வைகோவிடம், பழைய ஆக்ரோஷத்தையும், ஆவேசத்தையும் இப்போது பார்க்க முடியவில்லை. இதற்கு காரணம் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் தளர்வே ஆகும். பாமக அளவுக்கு நிலம் கையகப்படுத்துதலை தவறு என்று மதிமுக போல்டாக சொல்லவில்லை.

தமிழக வாழ்வுரிமை கட்சி:
விவசாயிகளிடம் என்.எல்.சி நிர்வாகம் அத்துமீறி செயல்படுமானால், கடுமையான எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
இதன் மூலம் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் நடவடிக்கைக்கு எதிராக உள்ளார்.

நாம் தமிழர்:
விளை நிலங்களை அழித்து நிலத்தை கையகப்படுத்தும் போக்கு கண்டனத்திற்குரியது என என்.எல்.சி.க்கு குட்டு வைத்திருக்கிறார் சீமான். அதேபோல் தமிழக அரசையும் யதேச்சதிராகப் போக்கு என அவர் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here