கோவை மாவட்டம், மருதமலை ஒட்டிய வனப்பகுதியில் பொதுவாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதாகவும்,
இவை இரவு நேரங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வரும் சூழலில்,

வழக்கம் போல் மருதமலை ஒட்டிய திடீர் குப்பம் வனப்பகுதியில் அவர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு யானை ஒன்று பிளிறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பதை பார்த்துள்ளனர்.
சுமார் 40 வயது மிக்க பெண் யானை உடல்நிலை சரியில்லாமல் தனது 3 மாத ஆண் குட்டியுடன் அங்கு இருந்துள்ளது. இதனை அடுத்து, இது குறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் மற்றும் மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, யானைக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பழங்கள் உள்ளிட்டவை உணவாகவும் கொடுக்கப்பட்டு, அந்த யானை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அந்த யானையின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், யானையின் உட்லநலக் குறைவுக்கான காரணங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

மேலும், யானைக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வரும் பகுதி இரவு நேரங்களில் யானைகள் நடமாடும் பகுதி என்பதால், வனத்துறை அதிகாரிகள் தூரத்தில் இருந்து அந்த யானை மற்றும் அதன் குட்டியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மருதமலை வனப்பகுதியில் சிகிச்சையில் இருந்த பெண் யானை வனப்பகுதியில் விடுவித்தனர் வனத்துறையினர். கோவை மருதமலை அடிவார வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஐந்தாவது நாளாக யானையை வனத்துறை, கால்நடை மருத்துவ குழுவினர் யனைக்கு உடல்நலம் குறித்து பரிசோதனை செய்தனர். இந்த நிலையில் உடல்நலம் தேறிய காட்டு யானையை வனத்துறை வனப்பகுதிக்குள் விடுவிக்கும் பணிகளை துவங்கினர்.
கிரேன் ரோப்புகள் கழற்றி பெண் காட்டு யானை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. இதை அடுத்து பெண் காட்டு யானையின் செயல்பாடுகளை வனத்துறையினர் தீவிர கண்காணிக்க பின் தொடர்ந்து வருகின்றனர்.