தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது;-
நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன். பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.

படியுங்கள். படியுங்கள். படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் “ஃபுல் ஸ்டாப்” தெரியக் கூடாது. ‘கமா’ தான் தெரிய வேண்டும். கல்வி தான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து.
ஆனால், அதிலும் கூட, மோசடிகள் செய்வதை “நீட்” போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால் தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். “நீட்” போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழகம் தான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்ல தொடங்கி இருக்கிறது.

இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவு கட்டுவோம். அது எங்கள் பொறுப்பு. மாணவச் செல்வங்களான நீங்கள் படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்க கூடாது. அதுதான் என்னுடைய எண்ணம். அதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழுமையாக ஆதரவாக நிற்கும். அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவன சிதறலும் இல்லாமல் படிக்க வேண்டும்.

படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம், என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்வி தான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்துக்கொள்ள வேண்டும்.
கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழகத்தின் முதல்வராக மட்டுமல்ல, உங்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் வாழ்த்துகிறேன்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.