கேரள மாநிலம் இடுக்கி அருகே மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதை அவர் பேஸ்புக்கில் நேரலையாக பகிர்ந்தது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் இடுக்கி அருகே செறுதோணி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு (31). அந்த பகுதியில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு விஷ்ணுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இது விஷ்ணுவுக்கு மனவேதனையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று விஷ்ணு வீட்டில் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு பேஸ்புக்கில் நேரலையாக வந்து தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி உள்ளார்.

பின்னர் அவர் கழுத்தில் தூக்கு போட்டு உள்ளார். அதை பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து விஷ்ணுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் உடனடியாக விஷ்ணுவின் வீட்டுக்கு விரைந்தனர்.
ஆனால் அவர்கள் செல்வதற்குள் விஷ்ணு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இடுக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104