தலைமைக்கு கட்டுப்படாத அமைச்சர்.! கனிமொழி படம் வேண்டாம் என்று கரார்.!

0
117
திமுக எம்.பி கனிமொழி

சென்னை: திமுகவை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவருக்கு எதிரான பஞ்சாயத்து ஒன்று அறிவாலயத்தின் கதவைத் தட்டியிருப்பதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் முன் பரேட் போல கொண்டு சென்று உள்ளனர்.

நடுரோட்டில் இருந்து பொட்டை காடு ஒன்றிற்கு அழைத்து சென்று அங்கே இந்த பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட ஆண்கள் அங்கே இருக்க, பல ஆண்கள் இரண்டு பெண்களையும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுக்க பல இடங்களில் கடுமையான போராட்டங்கள் கூட நடந்து வருகின்றன.

தமிழ்நாடு போராட்டம்:

இந்த நிலையில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த 24-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது திமுக மகளிர் அணி. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி பொறுப்பாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மணிப்பூர் கலவரத்துக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் நடத்த வேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அதனடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான “அந்த” புள்ளி தலைமையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை. இதனை மகளிர் அணியினர் அமைச்சரின் கவனத்துக் கொண்டு சென்றபோது, ஆர்ப்பாட்டம் நடத்த தேவையில்லை என அந்த அமைச்சர் சொல்லிவிட்டதால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

என்ன நடந்தது?:

ஆனால், அருகிலேயே இருக்கும் இன்னொரு மாவட்ட அமைச்சர் மகளிர் அணியினரை வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆனால் இந்த குறிப்பிட்ட அமைச்சர் மட்டும் வீம்பிற்காக ஆர்ப்பாட்டத்தை நடத்தவில்லையாம். தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட நிலையில் அந்த அமைச்சர் மட்டும் தனது மாவட்டத்தில் நடத்தாததால், இந்த விவகாரம் அறிவாலயத்தில் புகாராக வெடித்துள்ளது. இந்த நிலையில், விஷயம் பெரிதானது கேள்விப்பட்டு அதனை சரிக்கட்ட, கடந்த 29-ந்தேதி தனது மாவட்டத்தில் அடங்கியுள்ள தொகுதிகளில் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார் அந்த அமைச்சர். ஆனால், ஆர்ப்பாட்டத்திற்காக ஏற்பாடு செய்திருந்த எந்த ஒரு பேனர்களிலும் கனிமொழியின் படம் இல்லை.

படம் கூடாது:

கனிமொழி படத்தை வைக்கக்கூடாது என அமைச்சர் ஸ்ட்ரிக்டாக உத்தரவிட்டதால் மகளிர் அணியினர் கனிமொழியின் படத்தை தவிர்த்துள்ளனர். திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய அணி, சுற்றுச்சூழல் அணி ஆகியவைகளுக்கு கனிமொழியைத் தான் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார் தலைவர் ஸ்டாலின். “இந்த அணிகள் சார்பில் நடக்கும் விழா மற்றும் போராட்டங்களின் போது கனிமொழியின் படத்தை பயன்படுத்த வேண்டும் ” என ஏற்கனவே மா.செ.க்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், கனிமொழிக்கு எதிரான அரசியலை மகளிர் அணியில் நடத்திக்கொண்டிருக்கிறார் அந்த அமைச்சர். தலைமைக்கு கட்டுப்படாத இவரின் செயல்பாடுகள் மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கி வருகிறது என்கிறது மகளிர் திமுக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here