கொடியை பயன்படுத்தி கட்சிக்கு அவப்பெயர்.! இபிஎஸ் தரப்பு போலீஸில் புகார்.!

2 Min Read
இபிஎஸ் ஓபிஸ்

அதிமுக பொதுச் செயலாளர் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் அக்கட்சியின் கொடியும் சின்னமும் இவர் தரப்பினருக்கே உரியது என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
இந்நிலையில் தங்கள் கட்சியின் கொடியை பயன்படுத்தியதாக ஓ.பி.எஸ் மீது அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். மேலும் அவர் மீது குற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் கட்சியை யார் கைப்பற்றுவது என்று போட்டி உருவானது.

- Advertisement -
Ad imageAd image

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்பட்டு, இறுதியில் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். தற்போது கட்சியின் கொடியும், சின்னமும் எடப்பாடி தரப்பினருக்குதான் என்று உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தெளிவாக கூறிவிட்டது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு விரைவில் உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டங்களில் தங்கள் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டதாக அதிமுகவின் நிர்வாகிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதிமுக அமைப்பு செயலாளரும், வட சென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான நா.பாலகங்கா எழும்பூர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்,
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அதிமுகதான் அங்கீகரிக்கப்பட்ட கழகம் என்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கழகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடியை பயன்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை உண்டாக்கி வருகிறார். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் எங்கள் கழக கொடியை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் கட்சிகளிடையே பகையும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மட்டுமல்லாது நீதிமன்றத்திற்கு எதிரான நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொண்டு உள்ளனர். எனவே நிகழ்ச்சியை நடத்திய ஜேசிடி பிரபாகரன், செந்தமிழன், என்எம் பாபு, ராமஜெயம், ராயபுரம் சிவா ஆகியோர் மீதும் இவர்களை தூண்டி விட்ட ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அதேபோல ஆயிரம் விளக்கு (தெற்கு) பகுதி அதிமுக செயலாளரான எம்.பாலச்சந்திரன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நேற்று நடத்திய போராட்டத்தில் அதிமுக கட்சிக் கொடியை பயன்படுத்தி உள்ளனர். தேர்தல் ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமிக்கு தான் கட்சிக் கொடியும், சின்னமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Share This Article
Leave a review