கோவை அருகே வீட்டிற்குள் புக முயன்ற காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் தம்பதியினரின் வைரல் வீடியோ.
கோவை மாவட்டம், தடாகம் மற்றும் பொன்னூத்து அம்மன் கோவில் வனப்பகுதியில் தற்போது ஏராளமான யானைகளின் நடமாட்டம் உள்ளது. இந்த காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விலை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் ஒரு சில காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் வீட்டுக்குள் புகுந்து அரிசியை சாப்பிடவும் முயன்று வருகிறது.

இதன் காரணமாக தோட்டத்து வீடுகளில் தனியாக வாசிப்போம் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் பொன்னூத்து அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை பன்னிமடை பகுதியில் உள்ள ராஜகோபால் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது.

பின்னர் அந்த காட்டு யானை ராஜகோபால் வீட்டின் முன்பு வந்து அங்கிருந்த புளியங்காய்களை சாப்பிட்டது. இதனை அடுத்து சத்தம் கேட்ட ராஜகோபால் அவரது மனைவி மரகதம் வீட்டிற்கு வெளியே வந்து பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதில் அந்த வீட்டின் உள்பகுதியில் இருந்து பட்டாசில் தீப்பற்ற வைத்து வெளியே வீசுவதும் பின்னர் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்தவுடன் வீட்டிற்கு வெளியே வந்த ராஜகோபால் மற்றும் அவரது மனைவி பட்டாசு வெடித்து யானை விரட்டும் காட்சிகளும் அதில் பதிவாகி உள்ளது. இது குறித்து விவசாயி ராஜகோபால் கூறுகையில்;-

தங்களுக்கு 8 ஏக்கர் விவசாய நிலம் இருந்தும் காடு யானை தொல்லையால் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது 2 ஏக்கரில் மட்டுமே தென்னை மற்றும் பாக்கு விவசாயம் செய்து வரும் நிலையில் மாதத்திற்கு 20 நாட்கள் யானைகள் தங்களுடைய தோட்டத்திற்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாகவே விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் யானைகள் விவசாய நிலங்களில் புகாமல் இருந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என தெரிவித்தார்.