மழை சேதங்களை மதிப்பிட மத்திய குழு சென்னை வருகிறது என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
மழை சேதங்களை பார்வையிட சென்னை வந்த மத்திய மந்திரி ராஜநாத் சிங் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது; புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட பெரு வெள்ள பாதிப்புகளை மத்திய மந்திரி ஆய்வு செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நன்றி பெரு மழை ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீண்டும் சென்னை நகரமும் மக்களும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இத்தகைய பெருமழைகளும், உயிரிழப்புகளும் பொருட் சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொது கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5060 கோடி தொகையை வாங்க பிரதமருக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன். நமது கோரிக்கைகள் குறித்த மனுவையும் மத்திய மந்திரியிடம் அளித்துள்ளேன்.

இழப்பீடுகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் குழு ஒன்றும் விரைவில் தமிழ்நாடு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த கோரிக்கைகளை பரிசளித்து உரிய நிதி உதவியை மத்திய அரசு விரைவில் வழங்கிடும் என்று மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார். நிவாரண பணிகளை முழு வீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு அனைத்து பகுதிகளையும் இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.