மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் வீசிய சூறைக்காற்றில் 9 பேர் பலியாகி விட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கம், அசாம், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முன்தினம் திடீரென சூறைக்காற்று வீசியது. இதனால் பல குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன. அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் விழுந்ததில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஜல்பைகுரி மாவட்டத்தில் மட்டும் 5 பேர் பலியாகி விட்டனர். முதல்வர் மம்தா அங்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் 4 பேர் பலியாகி விட்டனர். தெற்கு சல்மாரா – மங்காச்சார் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்ராவில் கடும் சூறைக்காற்று காரணமாக படகு கவிழ்ந்ததில் 4 வயது குழந்தை இறந்தது.

இதனால் 2 பேர் காணாமல் போய்விட்டனர். தற்போது கச்சார், மேற்கு கர்பி அங்லாங் மற்றும் உடல்குரி ஆகிய இடங்களில் புயல் மற்றும் மின்னல் தொடர்பான விபத்துகளில் தலா ஒருவர் இறந்தனர்.

இதுதவிர மின்னல் தாக்கியதில் 6 பேர் காயமடைந்தனர். அசாமில் 22 மாவட்டங்களில் உள்ள 919 கிராமங்களில் கிட்டத்தட்ட 53,000 பேர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் 14,633 வீடுகள் சேதம் அடைந்தன.

கவுஹாத்திக்கு அருகிலுள்ள கர்பங்கா ரிசர்வ் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் சிக்கி தவித்தனர். இதேபோல் மிசோரம் மாநிலத்திலும் 300 வீடுகள், சர்ச்கள் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடேயே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.