நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம், சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் 5 காட்டு யானைகள் உணவு தேடி ஊருக்குள் புகுந்தது. இந்த பகுதியில் ஏராளமான வீடுகள் இருக்கின்றது. யானைகளைப் பார்த்துப் பயந்து போன பொதுமக்கள், யானைகள் புகுந்தது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள், கரடிகள், சிறுத்தைகள் நடமாட்டத்தால் மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் வேலைக்காகவும், அத்தியாவசிய தேவைக்காக கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக காட்டு யானைகள் இரு கூட்டங்களாக சுற்றி திரிந்தது. இதில் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திறிந்த காட்டு யானைகளை கடந்த வாரம் குன்னூர் துறையினர் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை கிளிஞ்சாடா தூதூர் மட்டம் பகுதிக்கு மஞ்சூர் அருகே உள்ள கெத்தை பகுதியில் இருந்து 5 காட்டு யானைகள் வந்து இரண்டு மாதங்களாக முகாமிட்டு இருந்தது.
இந்த 5 காட்டு யானைகள் விவசாய நிலங்கள் மற்றும் ரேஷன் கடைகள் வீடுகள் என அனைத்தையும் உடைத்து சேதப்படுத்தி வந்த நிலையில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மற்றும் குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டு 5 காட்டு யானைகளையும் கெத்தை பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை கொலக்கம்பை அருகே உள்ள அரையட்டி பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் யானைகள் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானைகளை விரட்டுவதற்கு வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மூன்று குழுக்கள் போதாது என்றும் கூடுதலாக வனத்துறை குழுக்களை அமைத்து யானைகளை விரட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதியில் சுற்றி திறியும் காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்பது அரையட்டி பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.