நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட சென்ற திமுக மாவட்ட ஒன்றிய உறுப்பினர் கணவர் உட்பட நான்கு பேர் கைது. அவர்களிடம் இருந்து வெடிபொருள்கள் பறிமுதல்.

நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் அருகே உள்ள கோடமலை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் சென்ற பொழுது கோடமலை அருகே உள்ள சரவணமலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த கோடை மலை பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் வயது 43 ஜீவ ரத்தினம் வயது 25 ஆகிய இருவரை பிடித்தனர்.

அப்போது இருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததின் அடிப்படையில் வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் காட்டுப்பன்றியை வேட்டையாட வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குன்னூர் ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த ஜீவக்குமார் வயது 46 என்பவரையும் பிடித்து விசாரித்தனர்.
இதில் குன்னூர் அருகே உள்ள பார்க் சைடு எஸ்டேட் வாகன ஓட்டுனரான பிரேம்குமார் வயது 48 என்பவரிடமிருந்து காட்டு பன்றியை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்டு காய் எனப்படும் வெடி பொருள் வாங்கியதாக தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் குன்னூர் வனச்சரகர் ரவிந்திரநாத் மற்றும் வனவர்கள் ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன், முருகன் மற்றும் வனக்காப்பாளர்கள் திலீப், லோகேஷ், விக்ரம், ஞானசேகர், ராம்குமார் அடங்கிய தனிப்படையினர் பார்க் சைடு எஸ்டேட் பகுதிக்கு சென்று பிரேம்குமார் என்பவர் வீட்டை சோதனை இட்ட பொழுது அவுட்காய் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடி மருந்துகள் பறிமுதல் செயதனர்.
பின்னர் காட்டுக்கோழிகளை பிடிக்க பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகள் மற்றும் பன்றியை கறுக்க பயன்படுத்தப்படும் ப்ளோ லேம்ப் வேட்டைக்கு பயன்படுத்திய மாருதி ஆல்டோ கார் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 ஆம் வருடம் (9)-ன்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.