தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட CISCE (Counsil for Indian School Certificate Examinations) பள்ளிகளுக்கு இடையிலான 2013-ம் ஆண்டிற்கான மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் சத்குருவால் தொடங்கப்பட்ட ஈஷா ஹோம் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றன.
இதில் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தேப்ராய் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டு போட்டிக்கான கொடியை ஏற்றி வைத்தார். செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் சரோ தனராஜன் போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் மாநிலம் முழுவதும் இருந்து 65 பள்ளிகள் மற்றும் 1,400 தடகள வீரர்கள் பங்கேற்றனர். வயதுகளின் அடிப்படையில் சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது.
சப்-ஜூனியர் பெண்கள் பிரிவில் லே மார்கரேட் ராஜீவ் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் பிரிவில் தன்வந்த் ராஜா, ஐயன் அமன்னா, பிரச்சனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
ஜூனியர் பெண்கள் பிரிவில் நெல்சி செர்லின் மற்றுன் சாதனா ரவி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் ருத்ரேஷ் பாலாஜி தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனியர் பெண்கள் பிரிவில் சஞ்சனா, சக்தி ராஜாராம் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். ஆண்கள் பிரிவில் சவன் எஸ் ரெஜினால்ட் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்த விளையாட்டு போட்டிகளின் தரத்தை உறுதி செய்யும் விதமாக, கோவை மாவட்ட தடகள சங்கத்தின் தொழில்நுட்ப குழு தலைவர் ஸ்ரீநிவாசன் மற்றும் துணைத் தலைவர் சிவகுமார் ஆகியோரின் மேற்பார்வையில் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக, போட்டியின் தொடக்க விழாவில் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களின் களரிப் பயட்டு போட்டியும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.