2023 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயின் மொத்த பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
25
நீரழிவு நோய்

2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – இந்திய நீரிழிவு (ஐ.சி.எம்.ஆர் இந்தியாபி) ஆய்வின்படி, நீரிழிவு நோயின் பாதிப்பு 10.1 கோடி ஆகும்.

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில்,  தேசிய சுகாதார இயக்கத்தின் (என்.எச்.எம்) ஒரு பகுதியாக, தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் (என்.பி-என்.சி.டி) கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. நீரிழிவு நோய் இந்த திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், மனித வள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆரம்பகால நோயறிதல், மேலாண்மை மற்றும் தொற்றா நோய்களுக்கு (என்.சி.டி) சிகிச்சையளிப்பதற்காக பொருத்தமான சுகாதார வசதிக்கு பரிந்துரைத்தல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் 724 மாவட்ட தொற்றா நோய் சிகிச்சை மையங்கள், 210 மாவட்ட இருதய பராமரிப்பு அலகுகள், 326 மாவட்ட பகல் நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் 6110 சமுதாய நல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பொதுவான புற்றுநோய்கள் போன்ற பொதுவான தொற்றா நோய்களைத் தடுப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்கான மக்கள்தொகை அடிப்படையிலான முன்முயற்சி தேசிய சுகாதார இயக்கத்தின் கீழும், விரிவான ஆரம்ப சுகாதார பராமரிப்பின் ஒரு பகுதியாகவும் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், 30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பொதுவான தொற்றா நோய்களுக்கான பரிசோதனைக்கு இலக்கு வைக்கப்படுகிறார்கள். ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களின் கீழ் இந்த பொதுவான என்.சி.டி.களை பரிசோதிப்பது சேவை வழங்கலின் ஒருங்கிணைந்த பகுதியாகும், இது நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் ஆபத்து காரணிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

நீரழிவு நோய்

ஆயுஷ்மான் பாரத் சுகாதார நலவாழ்வு மையத் திட்டத்தின் மூலம் விரிவான ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பின் கீழ், ஆரோக்கிய நடவடிக்கைகள் மற்றும் சமூக அளவில் இலக்கு தகவல்தொடர்புகளை ஊக்குவிப்பதன் மூலம் நீரிழிவு நோயின் தடுப்பு அம்சம் வலுப்படுத்தப்படுகிறது. கூடுதலாக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் திட்ட அமலாக்கத் திட்டங்களின் (பிஐபி) படி நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வை உருவாக்கும் நடவடிக்கைகளுக்கு என்.எச்.எம்  நிதி உதவி அளிக்கிறது.

மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ் போன்ற மத்திய நிறுவனங்கள், மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் துறை மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மையங்களில் நீரிழிவு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் ஏழை, எளியோருக்கு இலவசமாகவோ அல்லது அதிக மானியமாகவோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

என்.பி-என்.சி.டி.யின் கீழ், குளுக்கோமீட்டர் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகள் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின்படி வழங்கப்படுகின்றன. தேசிய சுகாதார இயக்கத்தின் இலவச மருந்து சேவை முன்முயற்சியின் கீழ், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு இன்சுலின் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், மாநில அரசுகளுடன் இணைந்து, மக்கள் மருந்தக திட்டத்தின் கீழ், இன்சுலின் உள்ளிட்ட தரமான ஜெனரிக் மருந்துகள் அனைவருக்கும் மலிவு விலையில் கிடைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here