போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வினை 10 ஆயிரத்து 809 பேர் நாளை விழுப்புரம் மாவட்டத்தில் எழுதுகிறார்கள். எஸ்.பி சஷாங்சாய் தலைமையில் 1150 பேர் தேர்வு பணியில் ஈடுபடுகின்றனர். இதனிடையே தேர்வு மையங்களில் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, சிறப்பு காவலர் தீயணைப்பு வீரர் என மொத்தம் 3359 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாவட்ட தலைநகரங்களில் நாளை 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்து தேர்வினை விழுப்புரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தேர்வு ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரி, அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு சட்டக் கல்லூரி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.எஸ் பொறியியல் கல்லூரி, ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் போலிஸ் தேர்வு நடக்கிறது. தேர்வாளர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டுமென காவல்துறை அறிவித்துள்ளனர். மேலும் எழுத்துத் தேர்வுக்கு வரும் நபர்கள் ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருப்பு நிற பந்து முனை பேனாக்கள், பரீட்சை அட்டை ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகிய உங்களுடன் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.

இதனை தொடர்ந்து, செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத், கால்குலேட்டர் போன்ற எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதிக்கப்படாது. தேர்வு அனுமதி சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி தேர்வு எழுதுபவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என எஸ்.பி சஷாங்சாய் தெரிவித்துள்ளார். இதனிடையே தேர்வு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன் மேற்பார்வையில் எஸ்.பி சஷாங்சாய் தலைமையில் தேர்வு கண்காணிப்பாளர் ,தேர்வு அறைக்காவலர்கள், போலீசார்கள் என ஆயிரத்து 150 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.