இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா இந்திய அணி; இந்தியா – நியூசிலாந்து இன்று பல பரிட்சை..!

2 Min Read
ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட்

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரையிறுதியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா முதல் முறையாக தனித்தே நடத்தும் உலக கோப்பை போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

- Advertisement -
Ad imageAd image

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பரிதாபமாக வெளியேறின. இந்நிலையில், பரபரப்பான முதல் அரையிறுதியில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பதிவு செய்து 18 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா… 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித், கில் அபாரமாக செயல்பட்டு நல்ல அடித்தளம் அமைப்பது, அடுத்து வரும் வீரர்கள் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது.

விராட் கோலி

கோஹ்லி, ஷ்ரேயாஸ், ராகுல், சூரியகுமார், ஜடேஜா என அதிரடி வீரர்கள் அணிவகுப்பதால், எதிரணிகளுக்கு இந்திய பேட்டிங் வரிசை சிம்ம சொப்பனமாக உள்ளது என்றால் மிகையல்ல. பும்ரா, ஷமி, சிராஜ் வேகக் கூட்டணியும் ஜடேஜா – குல்தீப் சுழல் தாக்குதலும் இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம். அனைத்து வீரர்களும் ஒருங்கிணைந்து விளையாடுவதே இந்திய அணியின் வெற்றி ரகசியம். சொந்த மண்ணில் விளையாடுவதும், ரசிகர்களின் ஆரவார ஆதரவும் கூடுதல் சாதகம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி தொடர்களில் சாதிக்க முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள இந்திய அணி, இம்முறை சூப்பர் ஃபார்மில் இருப்பதால் எத்தகைய சவாலையும் சமாளித்து 3வது முறையாக ஒருநாள் உலக கோப்பையை முத்தமிடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதே சமயம், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் உத்வேகத்துடன் களமிறங்குகிறது. 2019ல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை பைனலில் இங்கிலாந்துடன் மோதிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவிலும் சூப்பர் ஓவரிலும் சரிசமனாக (டை) ஈடுகொடுத்த நிலையில், அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து சாம்பியன் என அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. நடப்பு தொடரை தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் அமர்க்களமாகத் தொடங்கிய அந்த அணி, அடுத்து தொடர்ச்சியாக 4 தோல்விகளைத் தழுவியதால் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியானது.

முகமது சிராஜ்

கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள நியூசிலாந்து, அரையிறுதியில் இந்தியாவை வென்று பைனலுக்கு முன்னேற வரிந்துகட்டுகிறது. அந்த அணியிலும் கான்வே, ரச்சின், வில்லியம்சன், பிலிப்ஸ், டேரில் மிட்செல், லாதம், வில் யங் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. போல்ட், பெர்குசன், சவுத்தீ, சான்ட்னர், ரச்சின் ஆகியோரது பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய அரையிறுதியில் அனல் பறப்பது உறுதி.

Share This Article
Leave a review