ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்ட சிறுவனுக்கு ஏன் உடல்நலக்குறைவு? மருத்துவரின் விளக்கம்

0
31

கர்நாடக மாநிலத்தில் ஸ்மோக் பிஸ்கெட் சாப்பிட்ட சிறுவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மருத்துவர் பரூக் அப்துல்லா விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், “சமீபத்தில் முகநூல் / வாட்சப் முதலிய சமூக வலைதளங்களில் கர்நாடக மாநிலத்தில் ஒரு பொருட்காட்சியில் “புகை ரொட்டி” ( ஸ்மோக் பிஸ்கெட்) சாப்பிட்ட சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்ட காணொளியைப் பார்க்கிறோம். இந்த ஸ்மோக் பிஸ்கெட் என்பது
திரவ நிலை நைட்ரஜனில் பிஸ்கட்டை நனைத்து அதை உண்ணும் போது திரவ நிலையில் இருக்கும் நைட்ரஜன் காற்றின் வெப்பத்தில் ஆவியாகிறது.

அதை உண்ணும் போது வாயில் இருந்தும் மூக்கின் துவாரங்களில் இருந்தும் புகை கிளம்புகிறது.
திரவ நிலையில் நைட்ரஜன் இருக்கும் போது அதன் குளிர்நிலை மைனஸ் 196 டிகிரியாகும்
நம் அனைவருக்கும் தெரியும். தண்ணீர் பூஜ்யம் டிகிரியில் பனிக் கட்டியாகிவிடும். நூறு டிகிரி வெப்பத்தில் ஆவியாகும்.

ஆனால் திரவ நிலை நைட்ரஜன் காற்றுடன் பட்ட மாத்திரத்தில் சில நொடிகளில் ஆவியாகும் தன்மை கொண்டது. அந்த சிறுவன் செய்த தவறு யாதெனில் அந்த ரொட்டியை திரவ நைட்ரஜனில் முக்கி கையில் எடுத்து வாயில் போட வேண்டும். இந்த சில நொடி நேரத்தில் திரவ நைட்ரஜன் ஆவியாகி விடும்.
ஆனால் அவனோ திரவ நைட்ரஜனை அப்படியே பருகிவிட்டான்

எனவே அந்த கடுங்குளிரான திரவ நைட்ரஜன் நேரடியாக சுவாசப்பாதை மற்றும் உணவுக் குழாய் போன்றவற்றை சேதப்படுத்தி விட்டது. எனினும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு அவன் உயிர் பிழைத்து விட்டதாக வரும் செய்திகள் ஆறுதல் அளிக்கின்றன.

எப்படி கடுமையான வெப்பம் நமக்கு தீக்காயங்களை ஏற்படுத்துகின்றனவோ அதே போல அதீத குளிர் தன்மையும் தீங்கு விளைவிக்கும். காணும் அனைத்தையும் நுகர்ந்து விடும் தன்மை நம்மிடையே வளர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஒரு பொருளை உண்பதற்கு கொடுக்கும் முன்பு அதன் பாதுகாப்பு தன்மையை உறுதி செய்வது பெற்றோர் மற்றும் வளர்ப்போருடைய கடமை.

இந்தச் சிறுவன் எடுத்த எடுப்பில் உடனே அந்த டம்ப்ளரில் இருந்த திரவத்தை பருகினான் இல்லையா?இதுவே சிறுவர் சிறுமியரின் இயற்க்கை குணமாகும்.

இது போன்றே நாம் வீட்டில் வைத்திருக்கும் பாட்டில்களில் என்ன ஏது இருக்கிறது என்று தெரியாமல் உடனே அருந்தும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. எனவே வீடுகளில் உபயோகித்து முடித்த குளிர்பான பாட்டில்களில் மண்ணெண்ணெயை ஊற்றி வைப்பதை அறவே தவிர்த்து விடுங்கள்.

மண்ணெண்ணெய் போன்ற ஆபத்தான திரவங்களை குழந்தைகள் சிறுவர்களின் கைகளுக்கு எட்டாத வகையில் வைக்க வேண்டும். திரவ நைட்ரஜன் ஸ்மோக் பிஸ்கெட் ஃபயர் பீடா என்று தீ கக்கும் பீடா போன்றவற்றில் ரிஸ்க் உள்ளது. எனவே கட்டாயம் இவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது.
சிறுவர் சிறுமியரை கவனத்துடன் கண்காணித்து வளர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here