தந்தையின் சடலம் வீட்டில் இருக்கும் நிலையில் +2 தேர்வு எழுதிய மாணவி , சோகத்தில் உறைந்த கருவேப்பிலைபாளையம் கிராம மக்கள் .
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் சுப்பராயலு(54) இவர் மிதிவண்டி மூலம் ஊர் ஊராக சென்று மிளகாய் வியாபாரம் செய்து வருகின்றார். இவருக்கு குப்பம்மாள் என்ற மனைவியும் , சுகந்தி, சுகுணா, சுபி, அபி, அனிதா என ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர் .
சுப்புராயலுவின் இரண்டு பெண் பெண் பிள்ளைகள் திருமணமான நிலையில் , இன்னும் மூன்று பேருக்கு திருமணமாகாமல் உள்ளனர் . நேற்று (திங்கட்கிழமை) காலை 10மணி அளவில் கருவேப்பிலைபாளையத்திலிருந்து மிளகாய் வியாபாரத்துக்கு சைக்கிளில் செல்லும் போது திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தனூரில் சாலையைக் கடக்கும் போது சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார்.

இவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்..
இன்னிலையில் இவரது கடைசி மகள் அனிதா அருகிலுள்ள சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் மார்ச் 1ஆம் தேதி தமிழ் தேர்வு எழுதிவிட்டு 5ம்தேதி இங்கிலீஷ் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு தனது சைக்கிளில் மிளகாய் வியாபாரத்துக்கு சென்ற தந்தை தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது கார் மோதி விபத்தில் படுகாயம் அடைந்து இறந்ததைக் கண்டு மிகுந்த சோகத்திலும் மன வேதனை அடைந்தார். இதனை கேள்விப்பட்டதும் தந்தை இறந்த சோகத்தில் இவரும் இவரது குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. இருந்தபோதிலும் இன்று காலை 10மணிக்கு ஆங்கில தேர்வை சரவணம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் எழுதிவிட்டு மீண்டும் வந்து தனது தந்தையின் உடலை கட்டி அழுதார்.

இதனை கண்ட கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் சோகத்தில் மூழ்கினர் . இது குறித்து அனிதா கூறியதாவது எனது தந்தை சைக்கிள் மூலம் மிளகாய் வியாபாரம் செய்து வந்து எங்கள் ஐந்து பேரையும் படிக்க வைத்துள்ளார். எனது அம்மா கூலி வேலை செய்து வருகின்றார். நான் பிளஸ் டூ படித்து வருகிறேன் எனது 4 வது அக்காள் காலேஜ் படித்து வருகின்றார். என்னை போலீசுக்கு படிக்கவைப்பதாக எனது தந்தை கூறினார். அவர் இறந்து விட்டதால் எங்களையும் எங்கள் குடும்பத்தையும் இனி காப்பாற்றுவதற்கு ஆள் இல்லை. எனது படிப்பு எனது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நான் படித்து போலீசாக விரும்புகிறேன். எங்களுக்கு மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் அல்லது தமிழக அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் .