கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகார் கூறியிருந்தார். இதனையடுத்து புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், ராஜேஷ்தாஸீக்கு ஆதரவாக செயல்பட்டதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டத்தோடு, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்கள் இருவர் மீதும் கடந்த 2021ஆம் ஆண்டு ஜீலை மாதம் விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓன்றரை ஆண்டிற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் அனைத்து அரசு தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதனையடுத்து பெண் எஸ்பி கூறிய பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாகவும், இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 68 அரசு தரப்பு சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அளித்துள்ள பதில்கள் தொடர்பாகவும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோரிடம் தனித்தனியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி நீதிபதி புஷ்பராணி விசாரணை நடத்தி அவர்கள் அளித்து வரும் பதில்களை பதிவு செய்து வருகிறார். இதில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 297 கேள்விகளும், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு 175 கேள்விகளையும் தயார் செய்துள்ள நிலையில் காலையில் இருந்து மாலை வரை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் நீதிபதி புஷ்பராணி கேள்விகளை எழுப்பி அதற்கு அவர் அளித்து வரும் பதில்களை பதிவு செய்து வருகின்றார். இதில் தற்போது வரை பாதியளவு கேள்விகள் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் நீதிமன்ற நேரம் முடிவதை சுட்டிக் காட்டி மீதமுள்ள கேள்விகளுக்கான பதிலை சொல்வதற்கு தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் நீதிபதியிடம் முறையிட்டனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி புஷ்பராணி, நள்ளிரவு நேரத்தை கடந்தாலும் கூட பரவாயில்லை, அனைத்து கேள்விகளுக்கும் இன்றே பதில் சொல்லிவிட்டு தான் இருவரும் செல்ல வேண்டும் என கண்டிப்புடன் கூறி விட்டு தொடர்ந்து தனது கேள்விகளை கேட்டு பதிவு செய்து வருகிறார். இதனால் இன்றைய வழக்கு விசாரணையானது இரவு நேரத்தைக் கடந்தும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.