போதைப் பொருட்களில் இருந்து தமிழகம் மீட்டெடுக்கப்படப் போவது எப்போது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவா எனப்படும் போதைப் பாக்குகளை சாப்பிட்டு வகுப்பறையில் போதையில் உறங்கிய மாணவனை கண்டித்த ஆசிரியர், அந்த மாணவனால் கொடூரமாகத் தாக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவத்திற்காக சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தாக்குதலுக்கு உள்ளான ஆசிரியர் விரைவில் நலம் பெற்று இல்லம் திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியரைத் தாக்கிய மாணவர், போதைப் பாக்குகளையும், புகையிலையையும் மெல்லும் வழக்கத்திற்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது. அதனால் ஆசிரியர்களின் கண்டிப்புக்கு ஆளான அவர், சில நாட்களுக்குப் பிறகு நேற்று தான் பள்ளிக்கு திரும்பியதாகத் தெரிகிறது.தமது செயலுக்காக மன்னிப்பு கேட்ட போதிலும், வகுப்பறையிலேயே போதைப் பாக்குகளை மென்று மயக்கத்தில் உறங்கியிருக்கிறார்.
அவரை எழுப்பியதற்காகத் தான் ஆசிரியரை அவர் தாக்கியிருக்கிறார். மாவா தந்த போதையில் தாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட அறியாமல் அந்த மாணவர் செயல்பட்டிருக்கிறார். இந்த மாணவர் ஓர் எடுத்துக்காட்டு தான். பெருமளவிலான மாணவர்கள் போதை என்ற புதைகுழியில் சிக்கி தங்களின் எதிர்காலத்தை புதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.