நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? தி.மு.க எம்பிக்கள் விளக்கம்..!

2 Min Read
கனிமொழி எம்.பி

நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் புகுந்து அத்துமீறி தாக்கிய சம்பவத்தின் போது நடந்தது என்ன? என்பது பற்றி கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இரண்டு வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தமிழக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மக்களவை திமுக குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

சம்பவம் நடந்த போது நான் அவையில் தான் இருந்தேன். திடீரென சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்த போது ஒரு வாலிபர் மேஜையை தாண்டி தாண்டி ஓடி வந்தார். இன்னொருவர் மேலே இருந்து குதித்தார். மேஜையைத் தாண்டி ஓடி வந்தவரை எம்பிக்கள் மற்றும் பாதுகாவலர்கள் தடுத்தனர். அந்த வாலிபர்களின் கையில் சிலிண்டர் போன்று பொருள் இருந்தது. அதிலிருந்து புகையை வரச் செய்தனர். மஞ்சள் நிறத்தில் வந்த அந்த புகையில் வாடையும் அடித்தது. மூச்சு முட்டுவது போலவும் இருந்தது. புகையின் நெடியை உணர முடிந்தது.

கனிமொழி எம்.பி

வாலிபர்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதிக்கும் அளவுக்கு கட்டிட அமைப்பு உள்ளது. வாலிபர் உள்ளே வர ஒரு பாரதிய ஜனதா எம்.பி. கையெழுத்து போட்டிருக்கிறார். எம்பிக்கள் மட்டுமல்ல நாட்டில் பிரதமர் வரக்கூடிய ஒரு அவையில் பாதுகாப்பு இல்லை. கேள்வி கேட்டால் தேசத்திற்கு எதிரானவர்கள் என்கிறார்கள். நேற்று நடந்த இந்த சம்பவம் தான் தேச பாதுகாப்புக்கு நடந்த மிகப்பெரிய அச்சுறுத்தல். இதற்கு பதில் சொல்ல வேண்டும். இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். தனியாக யாரும் இதை செய்திருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

எம்.பி. திருச்சி சிவா

திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதாவது:-

இந்த சம்பவம் மிகுந்த கண்டனத்துக்கு உரியது. பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த வாலிபர்களுக்கு அடிபடவில்லை. அவர்கள் நன்றாக பயிற்சி பெற்றவர்களாக இருக்கலாம். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியினர் ஒன்றுமே நடக்காதது போல மசோதாக்களை நிறைவேற்றுதலையே குறியாக இருக்கிறார்கள். புகை கக்கும் சிலிண்டர்களுடன் வாலிபர்கள் எப்படி உள்ளே நுழைந்திருக்க முடியும்? எனவே இது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியதாவது:-

அவையில் புகைந்தது விஷ வாயுவாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்? புதிய நாடாளுமன்றத்தில் ஆடம்பரத்துக்கு காட்டிய அளவுக்கு பாதுகாப்புக்கு அக்கறை காட்டவில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். பழைய நாடாளுமன்றம் இன்றும் நல்ல நிலையில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? பார்வையாளராக வந்த வாலிபர்களுக்கு பாரதிய ஜனதா எம்.பி. கையெழுத்து போட்டு கொடுத்திருக்கிறார். இதுவே எதிர்க்கட்சி எம்பியாக இருந்தால் என்ன பேசி இருப்பார்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a review