பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது என்று திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து பெரியகுளம் புதிய பஸ் நிலையம், தேனி நகர் பங்களாமேடு ஆகிய இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;-

பாஜக ஆட்சியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கீடு செய்யவில்லை, வெறும் செங்கலை மட்டும் வைத்திருந்தனர். அந்த செங்கலை கூட நான் எடுத்து வந்து விட்டேன். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டினால் தான் திரும்ப தருவேன் என்று கூறி விட்டேன்.
சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பார்க்க கூட பிரதமர் வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் வந்து ஆய்வு செய்து பணம் தருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் நிதி தரவில்லை. தமிழக முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ₹6000 வழங்கினார்.

கடந்த 10 வருட காலமாக ஒன்றிய பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார். வரும் போதெல்லாம் தமிழில் பேசுவார். அப்போது திருக்குறளை பேசுவார். ஒருவருக்கும் புரியாது.
இவரது ஆட்சி காலத்தில் தமிழ் மொழிக்கான உரிமை பறிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரக்கூடாது என்பதற்காக கலைஞர் முதல்வராக இருந்த போது நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்தார்.

ஆனால் பாஜக அரசின் அடிமைகளான அதிமுக நீட் தேர்வினை நுழைய வைத்தனர். இதனால் அனிதா துவங்கி 21 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒன்றிய அரசு ஆண்டுதோறும் சிஏஜி அறிக்கையை தாக்கல் செய்யும்.
அதில், மாநில, ஒன்றிய அரசு செய்யும் செலவுகள் குறித்து தணிக்கை அறிக்கை வெளியிடும். ஒன்பது வருடங்களாக ஒன்றிய பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ₹7 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரவு செலவுக்கான கணக்குகள் அறிக்கையில் காட்டப்படவில்லை.

இதனை எல்லாம் நாம் தட்டி கேட்க வேண்டாமா?. சொல்வதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்கிற தாரக மந்திரத்தை கலைஞர் செயல் வடிவம் ஆக்கினார்.
இவ்வாறு பேசினார். இதேபோல், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நடந்த பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்;-

தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி என நரேந்திர மோடி சொல்லி வருகிறார். நான் சொல்கிறேன் ஆமாம் கலைஞரின் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. இந்த ஒட்டுமொத்த தமிழகமும் கலைஞரின் குடும்பம் தான். திமுகவினருக்கு தூக்கம் போய்விட்டது என்று மோடி பேசி வருகிறார்.
ஆமாம் தூக்கம் போய்விட்டது. உங்களை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா அல்லது மிஸ்டர் 28 பைசாவா என மோதி பார்ப்போமா என்றார்.