நில பரப்பளவு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து வார்டு மறுவரையறை செய்ய தமிழ்நாடு அரசுக்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரம் தமிழக அளவில் சென்னைக்கு அடுத்த பரப்பளவில் இரண்டாவது பெரிய மாநகரமாக உள்ளது.

1981 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியாக இருந்த கோவை 2013-ல் பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தென்னிந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை.
கொங்கு நாட்டின் மிக முக்கிய மாநகரமாக கோவை திகழ்கிறது. பஞ்சு, நெசவு, உயர்கல்வி, மருத்துவம், பவுண்டரி, மோட்டார் தொழில் மேலும் பல தொழில் வாய்ப்புகள் உள்ள முக்கிய தொழில் மையமாக திகழ்கிறது.

பல பெருமைகளை உடைய கோவை பெருநகர மாநகராட்சி பல ஆண்டுகளாக எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்களிடம் இருந்து வருகிறது.
கோவையில் உள்ள ஒரு சில வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு உள்ளதை அறிய முடிகிறது. இதை செய்யும் அதே நேரத்தில் நில பரப்பளவு மற்றும் வாக்காளர் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து வார்டு மறுவரையறை செய்ய வேண்டும்.
பாராளுமன்றத் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வந்து குறுகிய காலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

மாநகராட்சி விரிவாக்கம் சம்பந்தமாக தமிழக அரசு தற்போது உரிய அறிவிப்பு கொடுத்து அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல் விட்டால் மீண்டும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விரிவாக்கம் என்பது எட்டா கனியாகவே போய்விடும் அல்லது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து,
நகர்ப்புற ஊராட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் இதை செய்தால் ஒரு சில பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பினை கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது அரசுக்கு தேவையற்ற நிதி செலவீனம் அதிகம் ஆகும்.

மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் பொழுது அதில் உள்ள முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பெருகிவரும் மக்கள் தொகைக்கும், வாகன போக்குவரத்துக்கும் ஏற்றவாறு சாலைகளையும் மேம்படுத்த வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கான திட்ட வரையறைகளை வெளியிடுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

பெருநகர மாநகராட்சிகளுக்கிடையே ஒட்டி உள்ள கிராமம், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளின் சீரான வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு பெருநகர மாநகராட்சி வார்டு மறுவரையறை செய்திட தமிழக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுக்கும் நடவடிக்கையை ஊரக உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.