வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு மட்டும் ஓட்டு போடக்கூடாது என்பதை வலியுறுத்தி புதிய பிரசாரத்தை தொடங்க உள்ளதாக அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் அய்யாக்கண்ணு தலைமையில்;-
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் பிரதமர் கிசான் நிதியுதவி திட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் நிதி உதவி வழங்கக்கோரி மனு அளித்தனர். அதை தொடர்ந்து அவர் கூறுகையில், தேர்தல் வந்தால் மட்டும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

அப்போது முடிந்தவுடன் எங்களை அடிமைபோல் நடத்துகிறார்கள். பிரதமர் மோடி எல்லா விவசாயிகளுக்கும் மாதம் ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த தொகையே குறைவு. ஆனால் அறிவித்த தொகையும் விவசாயிகள் அனைவருக்கும் கிடைக்கவில்லை.
விவசாயிகளுக்கு எல்லா உதவியும் செய்யப்படும் என தெரிவித்தார்கள், லாபகரமான விலை கிடைக்கும் என கூறினார்கள். ஆனால் குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைப்பதில்லை. டெல்லியில் போராட்டம் நடத்தலாம் என்றால் எங்களை போகவிடாமல் தடுக்கிறார்கள்.

டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசுகிறார்கள். அதில் ஒரு விவசாயி இறந்துள்ளார். பிரிவு 19 என்ன சொல்கிறது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை யார் வேண்டுமானாலும் செல்லலாம்.
தங்களின் உரிமைக்காக பேசலாம், போராடலாம் என்று தெரிவிக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இந்த சட்டத்தை மதிக்கவில்லை. சர்வாதிகார நாடுகளை போல் விவசாயிகளை நடத்துகிறார்கள். தமிழகத்தில் விவசாயிகளை ஒடுக்க பார்க்கிறார்கள்.

எத்தனால், மீத்தேன், பெட்ரோல், டீசல் எடுப்பதற்காக விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர். இந்த தேர்தலில் மிஷினில் கோளாறு செய்து, பணம் கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்று பிரதமர் மோடி நினைத்து கொண்டிருக்கிறார்.
யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள், மோடிக்கு மட்டும் ஓட்டு போடாதீர்கள் என்று நாடு முழுவதும் அந்தந்த மாநில விவசாய சங்கங்களை திரட்டி பிரச்சார இயக்கம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 20 சதவீத விவசாயிகள் மோடிக்கு வாக்களிக்காமல் இருந்தாலே போதும்.

இதற்காக டெல்லிக்கு சென்று விவசாய சங்க பிரதிநிதிகளை சந்திக்க உள்ளோம். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டதாக தெரிவித்தார். அப்போது மாநில செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் உடனிருந்தனர்.