விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.30 வசூலிப்பதால் ஒன்றிய அரசு மீது பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தென்மாவட்டங்களை நோக்கிச் செல்லும் பெரும் பாலான ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்தே செல்கின்றன. கேரளா மற்றும் வடமாநிலங்களை இணைக்கும் ஆந்திரம், கர்நாடகம் செல்லும் ரயில்களும் விழுப்புரம் ரயில் நிலையம் வந்து செல்கின்றன.

இருப்பினும் மொத்தம் 117 ரயில்கள், விழுப்புரம் ரயில் நிலையம் வழியாக சென்று வருகின்றன. இவற்றில் திருப்பதி, புருலியா, கரக்பூர் உள்ளிட்ட 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள், புதுச்சேரி, தாம்பரம், மயிலாடுதுறை, மதுரை, சென்னை எழும்பூர், மேல்மருவத்தூர், காட்பாடி உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் என 14 ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்தே புறப்பட்டுச் செல்கின்றன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையம் மூலம், தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. இங்கு 6 நடைமேடைகள் உள்ளன. குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 35 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எந்த நேரமும் பரபரப்பாகவும், பயணிகள் கூட்டம் மிகுந்தும் விழுப்புரம் ரயில் நிலையம் காணப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு அதிகளவில் ரயில்கள் வந்து செல்வதால் சில சமயங்களில் ரயில்களை நிறுத்த இடம் கிடைக்காமல் பல ரயில்கள், நிலையத்துக்கு வெளியே சற்றே காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது.

அதேபோல் ரயில் நிலையத்தில் போதுமானளவு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. குறிப்பாக சென்னை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களுக்கு வேலை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
அவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை ரயில் நிலையம் முன்பாக உள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இந்த இருசக்கர பார்க்கிங் இடத்தில் அடாவடியாக ஒன்றிய அரசு கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அப்போது 12 மணி நேரத்திற்கு ரூ.15 என்றும், அதற்கு மேல் தாண்டினால் 24 மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணம் கொடுக்க வேண்டும் என்று அடாவடியாக வசூல் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஒப்பந்தம் எடுத்தவர்கள் கூறுகையில்;- விழுப்புரம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் எடுப்பதற்கான விலையை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளதாகவும், அதனால் வாகன ஓட்டிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பொது 24 மணிநேரத்திற்கு ரூ.5, ரூ.10 என்று கட்டணம் வசூலித்த நிலையில் பல மடங்கு உயர்த்தி ரூ.30 கட்டணம் வசூலிப்பதால் ஒன்றிய அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் ரயில் பயணத்தை நம்பி வரும் பொதுமக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே இந்த பார்க்கிங் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.