விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. எதிர்மறைச்சிந்தனைகளையே வேண்டாம் என சீமான் வேண்டுகோள்

0
60
விஜய் ஆண்டனி - மகள்

விஜய் ஆண்டனி மகள் தற்கொலைக்கு நாம் தமிழர் கட்சி சீமான் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “தமிழ்த்திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர், புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத்திறன் கொண்ட படைப்பாளி அன்புத்தம்பி விஜய் ஆண்டனி அவர்களின் அன்புமகள் மீரா தற்கொலைசெய்து உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

அண்மைக்காலங்களில் அடுத்தடுத்து சின்னஞ்சிறு பிள்ளைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. எனதன்புத் தம்பி, தங்கைகளே! மன அழுத்தம், மன உளைச்சலினால் இளம்பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.

மரணம் என்பது எதுவொன்றிற்கும் தீர்வாக இருக்க முடியாது. அதுவொரு கொடிய முடிவு. அம்முடிவினால், உங்களின் மன உளைச்சலை மேலும் பலமடங்காக உங்கள் பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் வாழ்நாள் முழுவதும் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுகிறீர்கள். உங்கள் மரணத்தின் மூலம் உங்கள் குடும்பத்தினர் காலம் முழுமைக்கும் கொடும் வேதனையை அனுபவிக்க நேரிடுமென்பதை ஒருநொடி உணர்ந்தாலே, உங்களுக்குத் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமே வராது.

வாழ்க்கை என்பது அமைதியாக ஓடும் நதி அல்ல. அது கொந்தளிக்கும் கடல். அதனை நாம் போராடித்தான் கடக்க வேண்டும். மண்ணில் பிறந்த அனைவருக்குமே மரணம் ஒருநாள் உண்டு. இடைப்பட்ட வாழ்வில் நாம் சாதனைகளை தேடித்தான் ஓட வேண்டுமே ஒழிய, சாவைத் தேடி ஓடக்கூடாது என்பதை என் அன்புப்பிள்ளைகள் ஆழமாக மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

மன அழுத்தம், மன உளைச்சல், வெறுமை, வெறுப்பு, விரக்தி, சோகம் என உங்களை எது ஆட்கொண்டாலும், அதனை உங்களை பேணிப் வளர்த்த பெற்றோர்களிடமோ, உடன்பிறந்தார்களிடமோ, நல்ல உறவினர்களிடமோ, நம்பிக்கைக்குரிய நண்பர்களிடமோ, கற்பிக்கும் ஆசிரியர்களிடமோ எவரோடாவது பகிர்ந்துகொள்ளுங்கள். மனம்விட்டு அவர்களோடு பேசுங்கள். ஆலோசனையும் தீர்வையும் கேட்டுப் பெறுங்கள்.

உள்ள உறுதியோடு சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள். போராடி வெல்லும் போர்க்குணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தற்கொலை போன்ற எதிர்மறைச்சிந்தனைகளையே அண்டவிடாதீர்கள்.

இருப்பதிலேயே, பெருந்துயரம் பெற்ற பிள்ளையை இழந்து நிற்பதுதான். அத்தகைய ஈடு செய்யவியலாதப் பேரிழப்பை சந்தித்து நிற்கும் அன்புத்தம்பி விஜய் ஆண்டனியையும், அவர்களது குடும்பத்தினரையும் எவ்வாறு தேற்றுவதென்று புரியவில்லை. வாழ்வின் உச்சப்பட்சத் துயரத்தைச் சந்தித்து நிற்கும் அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here